புதுடெல்லி: அடுத்த வருடம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை முன்னிறுத்தும் முயற்சி தீவிரமாகி உள்ளது. இதற்காக, பிஹாரின் துணை முதல்வரும் லாலுவின் இளைய மகனுமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2014 முதல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி மத்தியில் ஆட்சி செய்கிறது. இதற்கு அப்போது வீசிய ‘மோடி அலை’ காரணமானது. பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகளில் ஒற்றுமை இன்றி 2019 மக்களவை தேர்தலிலும் பாஜக ஆட்சியே தொடர்ந்தது. இதற்கு, பிரதமர் மோடியை எதிர்க்க, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து தம்மில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக்காததும் காரணமாகக் கருதப்பட்டது.
இதனால், அடுத்த வருடம் வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான அவர், தாம் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது முதல் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு, தாமே எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகும் ஒரு முயற்சியும் முதல்வர் நிதிஷிடம் உள்ளதாகக் கருதப்பட்டது. இவருக்கு அவர் வகிக்கும் மெகா கூட்டணியின் தலைமை கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவளித்தன.
அதேசமயம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், தம் தலைமையில் ஒரு எதிர்க்கட்சிகள் அணி அமைக்க முயல்கிறார். இவருடன் சேர்த்து பிரதமர் வேட்பாளருக்கு, கடந்த வருடம் செப்டம்பரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை முடித்த, காங்கிரஸின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தியை முன்னிறுத்தும் முயற்சிகளும் துவங்கின.
இந்நிலையில், மீண்டும் முதல்வர் நிதிஷையே பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சி தீவிரமாகி விட்டது. இவரது கூட்டணி ஆட்சியில் பிஹாரின் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி பிரசாத் யாதவ் அதற்காகக் களம் இறங்கி உள்ளார். எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் இளம் தலைவரான தேஜஸ்வி, இதர எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இவரது முயற்சி கடந்த சில தினங்களாகத் தீவிரமடைந்துள்ளது. இதில், முதலாவதாக ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் டெல்லியின் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலை, நேற்று தேஜஸ்வி சந்தித்துப் பேசியுள்ளார். இவரிடம், பிரதமர் வேட்பாளராக நிதிஷை முன்னிறுத்துவதன் பலனை எடுத்துரைத்துள்ளார் தேஜஸ்வி.
இது குறித்து பிஹாரின் துணை முதல்வரான தேஜஸ்வி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், ‘பாஜக அரசு அனைத்து பொது நிறுவனங்களையும் விற்பனை செய்கிறது. நாட்டின் தலைநகரையும் சில குறிப்பிட்ட பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இவற்றை தடுத்து நிறுத்தி, நாட்டை காக்க எதிர்க்கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவது முக்கியம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கேஜ்ரிவாலுக்கு முன்பாக தேஜஸ்வி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளும் ஜார்கண்டின் முதல்வர் ஹேமந்த் சோரனையும் சந்தித்துள்ளார். இந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரையும் நேரில் சந்தித்து துணை முதல்வர் தேஜஸ்வி பேச உள்ளார். இதன்மூலம், இளம் தலைவரான தேஜஸ்வி தனது தந்தை லாலுவை போல் தேசிய அரசியலில் முக்கிய இடம் பெறவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஆர்ஜேடி நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘தேஜஸ்வியின் இந்த முயற்சியினால் அவர் பிஹாரின் 2025 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராவது உறுதியாகி விடும். திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலர் ராகுலை பிரதமராக ஏற்க மறுக்கின்றனர். இதனால், அனைவருக்கும் பொதுவான வகையில் ஒரு கொள்கை அமைத்து அதற்கு பொருந்தும் வகையில் நிதிஷை முன்னிறுத்துவது தேஜஸ்வியின் நோக்கமாக உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
தேஜஸ்வியின் தந்தையும் ஆர்ஜேடியின் நிறுவனருமான லாலுவிற்கு தற்போது உடல்நிலை சரியில்லை. கால்நடை தீவன வழக்கில் தண்டனை அடைந்தவர் வழக்கு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் உள்ளது. இவருக்கு சிறையில் உடல்நலம் குன்றி, சிங்கப்பூருக்கு சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து விட்டு சமீபத்தில் திரும்பியுள்ளார். தேசியத் தலைவரான லாலு, அனைத்து கட்சி தலைவர்களுடன் நல்லுறவு கொண்டு, கூட்டணி பேச்சுக்களில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
தனது தந்தையை போலவே பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வியும் தேசிய அரசியலில் பங்கெடுக்கத் துவங்கி உள்ளார். இவரது மாநிலத்திற்கு வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவை நேரில் சென்று சந்தித்து நட்பு பாராட்டினார். தம் உறவினரான உபியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் யாதவையும் பலமுறை சந்தித்து நல்லுறவு பேணி உள்ளார். தற்போது முதன்முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களையும் சந்திக்கத் தயாராகி வருகிறார்.