பங்காளிகளா… நம்ம மதுரைக்கு மெட்ரோ வருது – முழு விவரம் இதோ!

Madurai Metro Rail Project: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் மொத்தம் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. உள்ளூர் பொது போக்குவரத்தில் வேகமான சேவையை அளிக்கக்கூடியதாக மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மெட்ரோ ரயிலுக்கும் அதிக முக்கியத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 

பேருந்து, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்தை விட அதிவிரைவு சேவையிலும், குறைவான கார்பன் வெளியேற்றத்திலும் மெட்ரோ முன்னணியில் இருப்பதால், இந்தியாவின் பல நகரங்களுக்கு மெட்ரோவை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சென்னை மெட்ரோ லிமிடெட் (CMRL) சிவப்பு வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை வழங்கிவருகின்றன. தற்போது, சேவையை நீட்டிக்கும் பணிகளும் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதாவது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டமாக மூன்று வழித்தடங்கள் உருவாகப்பட உள்ளன. 45.8 கி.மீ தூரத்திற்கு மாதவரம் – சிறுசேரி சிப்காட், 26.1 கி.மீ., தூரத்திற்கு கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ், 47 கி.மீ., தூரத்திற்கு மாதவரம் – சோழிங்கநல்லூர் என மூன்று வழித்தடங்கள் உருவாக உள்ளன. 

சென்னையை தவிர தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் மெட்ரோ ரயிலை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், கோவை அல்லது மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு அறிவிக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு அதன், பட்ஜெட்டில் மதுரையில் மெட்ரோ குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் இதன் பணிகளை முன்னின்று செயல்படுத்துகிறது.

இந்நிலையில், சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டரையும் அந்நிறுவனம் கோரியுள்ளது.  ரூ. 3 கோடி மதிப்பில் மதுரை மெட்ரோ ரயிலுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, 120 நாள்களில் மொத்த திட்ட பணிகளையும் முடித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ., தூரத்திற்கு மதுரையில் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதில், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், வசந்த நகர் உள்ளிட்ட 17 நிறுத்தங்களைக் கொண்டாக இந்த வழித்தடம் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ரூ.8 ஆயிரம் கோடியில் மெட்ரோ அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் மார்ச் இறுதியில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின்போது, நிதி ஒதுக்கீடு செய்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.