பங்குச் சந்தை விவகாரத்தில் மத்திய அரசு யோசனை நிராகரிப்பு!| The central governments idea on the stock market…rejection!

புதுடில்லி :பங்குச் சந்தையில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கான குழுவை அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசின் யோசனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், வெளிப்படைத்தன்மை தேவை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

நடவடிக்கை

உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபி.ஐ., இது குறித்து விசாரிக்க வேண்டும் என, அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.

இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் விதமாக, பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம்’ என தெரிவித்தது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம் என்ற நீதிமன்றத்தின் யோசனையை ஏற்கிறோம்.

அந்த குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். குழு உறுப்பினர்களின் பெயர்களை, ‘சீலிடப்பட்ட’ உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கை

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

பங்குச் சந்தை முறைகேடு குறித்து விசாரிக்கும் குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களின் பெயர்களை, சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்வதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

இந்த விஷயத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இதில் வெளிப்படைத்தன்மை தேவை. சீலிடப்பட்ட உறையில் உள்ள தகவல்களை நாங்கள் ஏற்றுக்கொண்டால், அதில் உள்ள விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரியாது என்று தான் அர்த்தம்.எனவே, இந்த நீதிமன்றமே ஒரு குழுவை அமைக்கும். அப்போது தான், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளே இந்த வழக்கை விசாரிக்கட்டும். ஆனால், கண்காணிப்பு குழுவில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.