பிரதமர் மோடியை சீண்டிய சர்வதேச முதலீட்டாளர்; ஒன்றிய அமைச்சர் கொதிப்பு.!

இந்திய தொழிலதிபர் அதானியின் முறைகேடுகள் குறித்து, அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அவரது பங்குகள் சரிந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார். அதானிக்கும் பிரதமர் மோடிக்குமான உறவு குறித்தும், பிரதமரால் தான் அதானி உலகின் மூன்றாம் இடத்திற்கு வந்தார் எனவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்தநிலையில் சர்வதேச பெரும் பணக்கார முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ், மியூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஆற்றிய உரையின் போது, ‘‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் அதன் பிரதமர் ஜனநாயகவாதி என்று நான் நினைக்கவில்லை. சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அவரிடம் உள்ளது. அதானியின் முறைகேடு மற்றும் பங்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.

மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீதான மோடியின் பிடியை கணிசமாக பலவீனப்படுத்தும், சர்வதேச அளவில் மோடியின் பிம்பத்தை குறைக்கும். அதேபோல் அதானி விவகாரம் இந்தியாவிற்கு மிகவும் தேவையான நிறுவன சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான கதவைத் திறக்கும். நான் அப்பாவியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” என்று சோரோஸ் கூறினார்.

சர்வதேச முதலீட்டாளரின் இந்த கருத்துக்கு ஒன்றிய அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, ”இந்தியாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்றிணைந்து பதிலளிக்க வேண்டும். சொரோஸின் கருத்து இந்தியாவின் ஜனநாயக செயல்முறைகளை அழிக்கும் பிரகடனம்.

நமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயன்ற வெளிநாட்டு சக்திகளை இந்தியர்கள் தோற்கடித்துள்ளனர், மீண்டும் அவ்வாறு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஜார்ஜ் சொரோஸுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரையும் கேட்டுக்கொள்கிறேன். குற்றம்சாட்டியவர் ஒரு அறிவிக்கப்பட்ட பொருளாதாரப் போர்க் குற்றவாளி ஆவார்’’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆனால் சோரோஸ் கருத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் ஜனநாயகவாதிகள் சமூக வலைதளங்களில் ஆதரவு ஹேஷ்டேக்குகளை பரப்பி வருகின்றனர். இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரைசினா@சிட்னி உரையாடலில் ஆஸ்திரேலிய அமைச்சர் கிறிஸ் பிரவுனுடனான அமர்வில் உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “சொரெஸ் நியூயார்க்கில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான, பணக்கார கருத்துள்ள நபர். முழு உலகமும் எப்படி இயங்குகிறது என்பதை அவரது பார்வைகள் தீர்மானிக்க வேண்டும் என்று இன்னும் நினைக்கிறார். மக்கள் உண்மையில் கதைகளை வடிவமைப்பதில் வளங்களை முதலீடு செய்கிறார்கள்.

அவரைப் போன்றவர்கள், தாங்கள் பார்க்க விரும்பும் நபர் வெற்றி பெற்றால் தேர்தல் நல்லது என்று நினைக்கிறார்கள், ஆனால் தேர்தல் வித்தியாசமான முடிவைத் தந்தால், அது குறைபாடுள்ள ஜனநாயகம் என்று அவர்கள் கூறுவார்கள். மேலும் இதில் அழகு என்னவென்றால், இவை அனைத்தும் திறந்த சமூகத்தின் வாதத்தின் கீழ் செய்யப்படுகிறது.

அவரது கருத்து ஐரோப்பிய சிந்தனையின் வடிவம். இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. நாங்கள் காலனித்துவத்தை கடந்து வந்த நாடு, வெளிநாட்டு சக்திகள் தலையிடும்போது என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

மேகாலயா தேர்தல் 2023: ஆட்சியை பிடிக்க தீவிரம்..ஆளுங்கட்சியை சாடிய காங்கிரஸ்.!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் இந்தியாவின் பிரதமர் ஒரு ஜனநாயகவாதி என்று தான் நினைக்கவில்லை என்று சொரெஸ் கூறியுள்ளார். மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் முன்பு குற்றம் சாட்டினார், அது நிச்சயமாக நடக்கவில்லை, இது ஒரு அபத்தமான ஆலோசனை’’ என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.