திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. கணிதவியல் பட்டதாரியான இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவருடைய தந்தை வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பிரியா மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், பிரியா வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பூக்கடை வைத்திருக்கும் மனோபாலாஜி என்பவரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என்று நினைத்து காவல் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர். அதன் பின்னர் போலீசார் காதல் ஜோடிகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.