மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்து புறப்பட்டுச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தம்மை பார்த்து கையசைத்த குழந்தைகளைக் கண்டவுடன் காரில் இருந்து இறங்கி அக்குழந்தைகளுடன் கைகுலுக்கி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழகத்திற்கு முதன்முறையாக இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டார். அதனையொட்டி புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட குடியரசு தவைர் மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்கு 12.01மணிக்கு வந்தார். பின்னர் 12.05 மணிக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கொடிமரம், துர்க்கை அம்மன் சன்னதிக்கு சென்றார். கோயில் சிற்பங்கள், கலைநயங்களை ரசித்தார்.
பின்னர் சுமார் 45 நிமிடங்கள் தரிசனம் செய்துவிட்டு கோயிலிலிருந்து மதியம் 12.56 மணிக்கு அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். செல்லும் வழியில் கோயிலுக்கு அருகேயுள்ள கீழவெளி வீதியில் குடியரசு தலைவரைக்காண பள்ளிக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் சாலையோரங்களில் நின்று கையசைத்தனர்.
அப்போது, குழந்தைகளைப் பார்த்த குடியரசு தலைவர் காரை நிறுத்தச் சொன்னார். உடனே காரிலிருந்து இறங்கிய குடியரசுத் தலைவர் நேராக நடந்து சென்று குழந்தைகளுடன் பேசி கைகுலுக்கி குழந்தைகளை மகிச்சியடையச் செய்தார். பின்னர், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். திட்டமிடாமல் திடீரென குடியரசுத் தலைவர் காரை நிறுத்தி இறங்கிய சம்பவத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் அதிர்ந்தனர்.