மைக்கேல் படத்தில் எனது காட்சிகளை நீக்கி விட்டனர் : தீப்ஷிகா வருத்தம்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக திவ்யான்ஷா கவுசிக், வரலட்சுமி ஆகியோருடன் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்தார் தீப்ஷிகா. இந்த படத்தில் கவுதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக, கிளப்பில் பாடும் பாடகியாக முதல் படத்திலேயே பல்வேறு பரிமாணங்களை காட்டி இருந்தார்.

தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த சில தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மைக்கேல் படத்தில் நான் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக தீப்ஷிகா வருத்தத்துடன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

மைக்கேல் திரைப்படத்தில் நான் நடித்திருந்த ஜெனிபர் கதாபாத்திரத்தில் வேறு ஒரு பிரபல நடிகை நடிப்பதாகத்தான் இருந்தது.. கடைசி நேரத்தில் சில காரணங்களால் அவர் விலகிவிட, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி என்னை அழைத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என கேட்டார். இந்த கதாபாத்திரம் குறித்து அவர் கூறிய அந்த ஒன்லைன் என்னை உடனே மைக்கேல் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது.
காரணம் படத்தில் என்னுடைய ஜெனிபர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் மொத்த படமும் நகரும் விதமாக கதை அமைந்திருந்தது. கதை கேட்கும்போதே இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என என்னால் உணர முடிந்தது. ஒரு சின்ன கதாபாத்திரம் என்றில்லாமல் முதல் பாதி முழுவதும் ஆங்காங்கே வந்து செல்லும் விதமாகவும் கிளைமாக்ஸில் வரும் விதமாகவும் காட்சிகளை அழகாக கோர்த்திருந்தார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

விஜய்சேதுபதியுடன் எனக்கு இன்னும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தின் நீளம் கருதி அவருடன் நான் நடித்த சில காட்சிகள் இதில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், வருகிற பாராட்டுகளால் மனது நிறைவாக இருக்கிறது. தற்போது தெலுங்கில் 'உத்வேகம்' என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம். அது மட்டுமல்ல சமூக ஆர்வலரும் கூட.. பொது பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றிற்கு சட்டரீதியாக போராடும் ஒரு வலுவான கதாபாத்திரம். படத்தின் கதாநாயகனாக அருண் ஆதித்யா நடித்துள்ளார் அவருக்கும் கூட வழக்கறிஞர் கதாபாத்திரம் தான்.. எங்கள் இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும்.

அடுத்ததாக தெலுங்கில் நான் நடித்துள்ள 'ராவண கல்யாணம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் மாதவ் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி நடிகர் ரவிதேஜாவின் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்து விட்டேன்.

தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இருந்து என்னைத்தேடி பட வாய்ப்புகள் வருவதால் தற்போதைக்கு தெலுங்கில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறேன். தமிழிலும் நான் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். என்கிறார் தீப்ஷிகா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.