வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: கடுமையான பூகம்பத்தால் உருக்குலைந்து போயுள்ள துருக்கிக்கு, பாகிஸ்தான் நிவாரண உதவிகளை அளித்துள்ளது. ஆனால், இந்த பொருட்கள் அனைத்து, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட போது துருக்கி அளித்தவை என பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், டிவி விவாதத்தில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அதில், பல்லாயிரகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது, துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவின. இதற்காக நிவாரண பொருட்களை வழங்கின.
இந்நிலையில் சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் அந்நாடு உருக்குலைந்து போயுள்ளது. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சகணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன.
மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வரும் நிலையில், சர்வதேச நாடுகளும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன. பாகிஸ்தானும் சி-130 விமானம் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த டிவி விவாதத்தில் அந்நாட்டு பத்திரிகையாளரான ஷாகித் மசூத் கூறியதாவது: பாக்., அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் அனைத்தும், மழை வெள்ளத்தால் தத்தளித்த போது துருக்கி அனுப்பி வைத்தது. அதனையே தான், பூகம்ப நிவாரண நிதியாக பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் தான், துருக்கியில் பூகம்பம் ஏற்பட்ட உடன், அதனை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாக அறிவித்ததுடன், நிவாரண நிதி அனுப்பி வைத்தார்.
உடனடியாக அந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூற துருக்கி செல்ல திட்டமிட்டார்.
ஆனால், விமானம் தரையிறங்க போதிய வசதியில்லாததாலும், துருக்கி அதிபர் உள்ளிட்டோர் மீட்பு பணிகள் கவனம் செலுத்துவதால், ஷெபாஸ் ஷெரீப்பின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இச்சூழ்நிலையில், பத்திரிகையாளரின் நிவாரண பொருட்கள் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement