* பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்
* திருவண்ணாமலைக்கு இன்று அழைத்து வர நடவடிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களை திருவண்ணாமலைக்கு இன்று அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12ம் தேதி இரவு 4 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்த மர்ம கும்பல், அதிலிருந்து ரூ.72 லட்சத்து 29 ஆயிரத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்ததும், அதிவேகமாக செயல்பட்டு மாநிலம் கடந்து, மாநிலம் தப்பியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ஹரியானா மாநிலத்திற்கும், திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் கர்நாடகா மாநிலத்திற்கும், வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் குஜராத் மாநிலத்திற்கும், திருவள்ளூர் எஸ்பி செபாஸ் கல்யாண் ஆந்திரமாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் குற்றவாளிகளை பிடிக்க விரைந்தனர். ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணையை மேற்கொண்டு வந்தார். மொத்தம் 5 எஸ்பிக்கள் கொண்ட 9 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்புத்துலக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த கொள்ளை தொடர்பாக கோலாரில் 2 பேரும், குஜராத்தில் 6 பேரும், ஹரியானாவில் 2 பேரும் என மொத்தம் 10 பேரை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதில், மூளையாக செயல்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரீப்(35) என்பவனையும், அவனது கூட்டாளியான ஆசாஜ்(37) என்பவனையும் துப்பாக்கி முனையில் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில், அந்த மாநில போலீஸ் துணையுடன் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பல மணிநேர போராட்டத்துக்கு பிறகே, அவனை பிடிக்க முடிந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளை கும்பலின் தலைவன் பதுங்கியிருந்த மேவாட் மாவட்டம், வனப்பகுதி நிறைந்தது. மேலும், ஆபத்தான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் அடைக்கலமாகும் இடம் என்றும் கூறப்படுகிறது. எனவே, மிகவும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டே, 2 பேரையும் தனிப்படையினர் நெருங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்படையிடம் சிக்கிய முகமது ஆரீப், கொள்ளைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவனை போல நடந்துகொண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியதாக தனிப்படையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர். அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விடிய, விடிய நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை முகமது ஆரீப் தெரிவித்துள்ளான்.
அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் சில மாதம் ஊழியராக வேலை செய்தபோது, இயந்திரத்தின் தொழில்நுட்பம், எந்த பகுதியில் பணம் இருக்கும், அதனை எப்படி திறப்பது போன்ற நுட்பங்களை தெரிந்து கொண்டதாகவும், அதன் பிறகு ஏடிஎம் கொள்ளையில் ஏற்கனவே 2 இடங்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதோடு, திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடுவதற்காக, சிறையில் இருந்தபோது தன்னுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட சில நண்பர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டு, கோலாரில் தங்கியிருந்து முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளையை கச்சிதமாக நிறைவேற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கொள்ளை கும்பலின் தலைவனான முகமது ஆரீப், ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால், அது தொடர்பான 4 மாநில போலீசாரும், நேற்று ஹரியானா விரைந்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின் பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் திருவண்ணாமலைக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி திருவண்ணாமலையில் முகாமிட்டு, கைது உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.