23 ஆண்டுகளுக்கு முன் மாயமான கணவரை கண்ணீர் மல்க அழைத்து சென்ற மனைவி: திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பூர்: திருப்பூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50), இவரது மனைவி செல்வலட்சுமி (44). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலம் மனநலம் பாதித்த நிலையில் இருந்தார்.
பின்னர், வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போனார். செல்வலட்சுமி பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, செல்வலட்சுமி தனது இரண்டு மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த வெங்கடாசலத்தை அங்குள்ள கேரள அரசின் கீழ் இயங்கும் காந்திபவன் அறக்கட்டளையினர் மீட்டு சிகிச்சையளித்து பராமரித்து வந்தனர். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து வெங்கடாசலத்திற்கு சுயநினைவு திரும்ப ஆரம்பித்தது.

அதன்பின், வெங்கடாசலம் தன் இருப்பிட முகவரியை காந்திபவன் அறக்கட்டளையினரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த அறக்கட்டளையினர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர், திருமுருகன்பூண்டி போலீசார் சமத்துவபுரத்தில் இருந்த செல்வலட்சுமியின் வீட்டை கண்டுபிடித்து அறக்கட்டளையினருடன் வீடியோ கால் மூலம் வெங்கடாசலத்தை காட்டி உறுதிபடுத்தி உள்ளனர். தொடர்ந்து, காந்திபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு வெங்கடாசலத்தை அழைத்து வந்து இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், எஸ்ஐக்கள் முருகேசன், தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் செல்வலட்சுமியிடம் ஒப்படைத்தனர். வெங்கடாசலத்திற்கு ஒரு மாதத்திற்கான மாத்திரைகளையும் அந்த அறக்கட்டளையினர் வழங்கினர். 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவரை கண்ணீர் மல்க கரம் பிடித்து அழைத்து சென்றார் செல்வலட்சுமி. இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.