"ChatGPT-ஐ லாப நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது ஆபத்தானது!"- எலான் மஸ்க் இப்படிச் சொல்ல என்ன காரணம்?

`Open AI’ என்ற நிறுவனம் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன், கிரெக் ப்ரோக்மேன், ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட சில பெரும் டெக் ஜாம்பவான்களால் 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

லாப நோக்கம் ஏதுமின்றி ஓப்பன் சோர்ஸாக பல செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அதிதிறன் கொண்ட ‘ChatGPT’ சர்ச் இன்ஜின்.

இந்த ‘ChatGPT’ அறிமுகமான சில மாதங்களிலேயே பல கோடி பயன்பாட்டாளர்களைப் பெற்று டெக் உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ‘ChatGPT’ போன்ற ஜெனெரேட்டிவ் AI தொழில்நுட்பங்களை எப்படிச் சிறப்பாக தங்களது சேவைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பெரு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அதேபோல ‘ChatGPT’-யை திறனை இனி முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் ‘Premium’ பிளானைக் காசு கொடுத்து வாங்கவேண்டும் என்ற சந்தா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே இதன் அசுர வளர்ச்சி எதிர்பாராத ஒன்றுதான்.

Open AI – ChatGPT

இதற்கிடையில், Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு திறனைத் தங்களின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் இணைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘Open AI’ நிறுவனத்தில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகின்றது. மிக விரைவில் இதன் சேவைகளும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இதைத்தொடர்ந்து Chat GPT-க்கு மாற்றாக கூகுள் நிறுவனமும் ‘Bard’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் தங்களின் சொந்த AI சாட்-பாட்டை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், “ChatGPT-யின் சேவையை இலவசமாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். `Open AI’ நிறுவனத்தின் ChatGPT-யை அதிக லாபம் ஈட்டக் கூடிய மைக்ரோசாப்ட் தனது கட்டுப்பாட்டில் கொண்டுசெல்வது தவறான போக்கு” என்று எச்சரித்துள்ளார் எலான்.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “‘Open AI’ அனைவரும் பயன்படுத்தும் வகையில் ‘Open source’-ஆக லாப நோக்கமற்று இருக்க வேண்டும், கூகுள் போன்ற பெருநிறுவனங்களுக்கு மாற்றாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதற்கு ‘Open- AI’ என்றே பெயரிட்டோம். ஆனால், தற்போது இது அனைவரும் பயன்படுத்தும் வகையில் இல்லாமல் ‘Closed Source’-ஆக மாறிவிட்டது. அதிகபட்ச லாபம் பார்க்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வசம் இது சென்றுவிட்டது. எங்களின் நோக்கம் இதுவல்ல!” என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஆபத்து குறித்தும் எலான் மஸ்க் பல முறை பேசியுள்ளார். குறிப்பாக, 2015-ல் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உடன் இணைந்து கருத்து தெரிவித்தவர், ‘கில்லர் ரோபோக்கள்’ உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். அதேபோல, “AI-யின் ஆபத்துகள் மனிதர்களுக்கு விளங்கும்போது, இன்று ரோபோக்களை ரசிக்கும் நான், அன்று அதைப் பார்த்துப் பயப்படத் தொடங்கியிருப்போம்” என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்க்

அது மட்டுமல்லாமல், AI குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய எலான், “ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிடச் சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்!” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்தச் செயற்கை நுண்ணறிவு (AI) துறையைச் சரியாக முறைப்படுத்திக் கையாளுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டுமெனப் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.