சமீப காலங்களில் Toxic relationship என்கிற வார்த்தையை அதிகம் கேள்விப்படுகிறோம். ஆண் – பெண் உறவே முரண்களால் நிறைந்திருந்தாலும் அந்த மோதலும், ஈர்ப்பும் கலந்த காதலே அந்த உறவைக் கொண்டு செல்கிறது. இப்படியான சூழலில் எந்தெந்த விதங்களில் ஓர் உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்..
“பல்வேறு காரணங்களைக் கொண்டு ஓர் உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாகி விட்டது எனக் கூற முடியும்” என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்…
“ஆண் – பெண் உறவில் சண்டைகள் வருவது இயல்பானது. ஒருவருக்கொருவர் அரவணைப்புடன் செயல்படுவதும், தங்கள் வாழ்க்கைக்கான முடிவுகளை இருவரும் சேர்ந்து எடுப்பதும்தான் ஆரோக்கியமான உறவு முறைக்கான அடையாளம். ஓர் உறவு நச்சுத்தன்மையாக மாறி விட்டதை பல காரணங்களைக் கொண்டு நம்மால் உணர முடியும். ஒருவருக்கொருவர் மாறி மாறி தன் இணையரின் வளர்ச்சிக்கு உதவுவது போய், எந்தச் சூழலிலும் ஆதரவாக நிற்காமல் இருப்பார்கள். எதிர்மறை எண்ணத்துடனேயே இணையரை அணுகுவர். அவர்கள் என்ன செய்தாலும் அவர்களை மட்டம் தட்டி கீழே இழுப்பார்கள்.
இணையர் மீதான அக்கறை துளியளவும் இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் என்ன செய்தாலும் அதனைக் குறை சொல்வர். இணையரது கஷ்டத்தை, வேதனையை உதாசீனப்படுத்தி விட்டுக் கடந்து விடுவார்கள். அவர்களை சந்தேகப்படுவது, வேறொருவருடன் தொடர்புபடுத்திப் பேசுவது, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சர்வாதிகாரத்தைக் கையாள்வது உள்ளிட்ட நிறைய காரணங்களைச் சுட்டலாம்.
ஒரு தவற்றை “அன்னைக்கு நீ அப்படி பண்ணீல்ல” என மீண்டும் மீண்டும் சொல்லிக் காண்பிப்பது, அதிகம் பொய் சொல்வது, உறவுக்கு நேர்மையில்லாமல் இருப்பது, இருவரும் பரஸ்பர மரியாதை கொடுக்க வேண்டும் என்பதோடு அவர்களுடைய தேவைக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பணம் சார்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் மோதிக் கொள்வர், இருவருக்குமே மன அழுத்தம் ஏற்படும்போது சலிப்பும் வெறுப்பும் இயல்பாக உண்டாகும். உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகளைக் கண்டு கொள்ளாமல் போவர்.

இணையருடன் நேரத்தைச் செலவிடுவதே முற்றிலும் குறைந்து போகும். பேசினால் சண்டை வருமோ என பேசாமல் தவிர்க்கும் நிலை, எந்த ஒட்டுதலும் இல்லாமல் பெயரளவுக்கு உறவுக்குள் இருப்பது, இந்த உறவுமுறை மாறாதா என ஏங்குவது, எப்போது சண்டை வரும் என்றே தெரியாமல் பதைபதைப்போடு இருப்பது என மேற்சொன்ன இத்தனையும் உறவுமுறை நச்சுத்தன்மையாகி விட்டதைக் குறிப்பவை.
இப்படியாக உறவுமுறை Toxic ஆகி விட்டதை உணர்வீர்களானால் அதனை இருவரும் பேசி சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். இருவரும் தங்கள் மீதான தவறுகளை எந்த ஈகோவும் இல்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் இணையரை வெல்வது வெற்றியல்ல… ஆகவே வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் திறந்த மனதுடன் உறவை முன் நகர்த்திச் செல்வதுதான் இதற்குத் தீர்வு” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
“ஆண் – பெண் உறவில் பெண்களைவிட ஆண்களே நச்சுத்தன்மை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் மானுடவியலாளரான மோகன் நூகுலா…
“ஆண் – பெண் உறவு என்பதே நச்சுத்தன்மை வாய்ந்ததுதான். அப்படியிருந்தும் அந்த உறவைத் தக்க வைக்க நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நச்சுத்தன்மை வாய்ந்த உறவைக்கூட காப்பாற்ற வேண்டும் என்கிற நமது நோக்கமே சிக்கலானது. இந்த உறவைப் பொறுத்தவரைக்கும் பெண்களைவிட ஆண்கள்தான் நச்சுத்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி பெண்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்.
இத்தனை காலங்களாக இந்த உறவைக் காப்பாற்றுவதற்காக ஆணின் செயல்கள்தான் நடைமுறை எனவும், பெண்கள் அவற்றை ஏற்றுக்கொண்டுதான் போக வேண்டும் என்கிற நிலை இருந்தது. இன்றைக்கு அது உடைந்து இதுபற்றி பெண்கள் வெளிப்படையாகப் பேசத்தொடங்கி இருக்கின்றனர்.
ஆண் – பெண் என்கிற எதிரெதிர் துருவங்கள் இணையும்போது இயல்பாகவே மோதல் வரும். இந்தப் பாலின மோதல் என்பது மிகவும் இயற்கையானது. அந்த இயல்பை நச்சுத்தன்மையாகக் கருதக்கூடாது. பெண்ணைக் கவர்வதற்காக ஆண்கள் தங்களை சாதுவானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். உறவுக்குள் சென்ற பிறகு அந்த சாதுவான பிம்பம் உடைந்து ஆண்களின் இயல்பான முரட்டுத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.
அப்படியாக அரிதாக ஏதேனும் ஒரு தருணத்தில் வெளிப்பட்டால் அதனை Toxic ஆகப் பார்க்கக்கூடாது. அனைத்து நடவடிக்கைகளையும் குரூரத்துடன் மேற்கொண்டு, இணையரை உடல் மற்றும் மன ரீதியாக தாக்கிக் கொண்டே இருப்பதுதான் நச்சுத்தன்மை வாய்ந்த உறவுமுறை” என்கிறார் மோகன் நூகுலா.
பார்வைக் கோணம்
மஞ்சுளா, செய்தி வாசிப்பாளர்: ஆண்களால்தான் பெரும்பகுதி பிரச்னையே. பெண்கள் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற பிறகு அங்குள்ள சூழலுக்கு ஏற்றாற்போல தங்களை மாற்றிக் கொள்கின்றனர். ஆண்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். பெண்களைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள்தான் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். எல்லாத் துறையிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக நின்று கட்டுப்படுத்தும் வேலையை பல ஆண்கள் செய்கின்றனர்.
நடத்தையை சந்தேகப்படுவதை ஆண் – பெண் இருவருமே செய்கின்றனர். உறவில் சந்தேகம் இருக்கவே கூடாது. பெண் தன் இணையரான ஆணை பொருளாதாரம் சார்ந்து சிறுமைப்படுத்துவதும், பெண்ணின் நடத்தையை ஆண் தவறாகச் சித்தரிப்பதும் ஏற்றுக்கொ ள்ளத்தக்கதல்ல. ஆண்கள் வெளியே சென்று சம்பாதிப்பதால் அவர்களுக்குதான் பொறுப்பு இருக்கிறது என்றில்லை. இல்லத்தரசிகளுக்கு அதை விட பெரும் பொறுப்பு இருக்கிறது.

பாலின சமத்துவம் இல்லாதபோது அது உறவுமுறையில் எதிரொலிக்கையில் அந்த உறவே நஞ்சாகிறது. ஆண் குழந்தைகளை பாலின பாகுபாடு இன்றி வளர்க்க வேண்டும். ஒரு பெண் அன்பு, பாதுகாப்பு இரண்டையும் எதிர்பார்த்துதான் ஆணிடம் வருகிறாள். அதனைக் கொடுப்பவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும்.
பெண்களும் இந்தத் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். என்ன முடியும், என்ன முடியாது என்பதை வெளிப்படையாகப் பேசி விட்டால் பிரச்னையே இல்லை. போலியாக ஒரு நம்பகத்தன்மையைக் கொடுத்து விட்டு ஏமாற்றும்போதுதான் உறவு கசந்து போகிறது. ஆண்களின் வருவாய்க்கு ஏற்ப குடும்பத்தை நடத்திச் செல்ல பெண்கள் தயாராக இருக்க வேண்டும். பண நெருக்கடியைக் கொடுக்கக்கூடாது. இறுதியாகச் சொல்ல வேண்டுமானால் நமக்கான உரிய மரியாதை கொடுக்காத எந்த உறவாக இருந்தாலும் அது நச்சுத்தன்மை வாய்ந்த உறவுதான்.
ராம் முரளி, எழுத்தாளர்: உறவைப் பற்றிய பார்வை இன்றைக்கு மாறி விட்டது. குடும்ப வன்முறைக்கு எதிராக சமீப காலங்களில் தீவிரமாகப் பேசுகிறோம். அந்த வரிசையில்தான் இந்த நச்சு உறவுமுறை பற்றிப பேசுவதையும் பார்க்கிறேன். முன்பு ஆணைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் பெண்ணுக்கு இருந்தது. இன்றைக்கு பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். பலவற்றையும் தெரிந்து கொள்ளச் சாத்தியமுள்ள இந்த இணையச்சூழலில் தங்கள் உரிமை சார்ந்து பேசுகின்றனர்.
இன்றைக்கு உறவு குறுகிய பரப்பிலிருந்து பரந்துபட்ட தளத்துக்குப் போய் விட்டது. இதனை முழுமையாக உணர்ந்தாலே நிறைய நல்ல மாற்றங்கள் நிகழும். நம் எதிர்பார்ப்புகள் அதிகமாகும்போது அது பூர்த்தி செய்யப்பட முடியாத போது நம் இணையரை ஏளனம் செய்வது, தோற்றுப்போனவர்களாகப் பார்ப்பது ஆகியவை உறவை நஞ்சாக்கும்.

வாழ்க்கையே பொருளாதாரம் சார்ந்த பிடிமானமற்ற நிலையில் இருக்கும்போது பொருள் சார்ந்து அதிகப்படியான எதிர்பார்ப்புகளோடு உறவைத் தொடர்வது பிரச்னைக்குரியது. ஆண் – பெண் இருவருக்குமே பரஸ்பரம் எதிர்பார்ப்புகள் இருக்கும். எல்லா நேரத்திலும் அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாது என்கிற உண்மையை இருவரும் உணர வேண்டும். நடத்தை சார்ந்த சந்தேகம் கொள்வது மிகமிகத் தவறானது. அப்படி சந்தேகம் எழுகையில் வெளிப்படையாகப் பேசி தெளிவு பெற்றால் கூட பிரச்னை இல்லை. உள்ளுக்குள்ளேயே வைத்துத் தேவையில்லாத கற்பனைக்குக் கொண்டு செல்வது பெரும் பிரச்னை.
இன்றைய உறவில் பெரும்பாலானவர்கள் திறந்த மனதுடன் இருப்பதில்லை. செல்போன் என்பது ரகசியங்களின் கூடாரமாக இருக்கிறது. அதன் விளைவாக உறவுப்பிளவு அதிகமாகிறது. வெளிப்படைத்தன்மை வழியாகாத்தான் இதைக் கடக்க முடியும். உறவுச்சிக்கல் அளவு கடந்து எழுகையிலும், அதன் விளைவாக ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்வதும் ஓர் உறவில் நடக்கிறதென்றால் அதுவே நச்சு உறவு என்று சொல்லலாம். இதற்கு இரு தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். அந்தந்த உறவுக்கான அடிப்படை நியாயத்தோடு அந்த உறவைத் தொடர்ந்தாலே போதும்.