அமெரிக்க-ஹங்கேரிய தொழிலதிபரும், பெரும் முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ் ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் அதானி விவகாரம் குறித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படி ஜார்ஜ் சொரோஸ் என்ன பேசினார்… அதற்கு பா.ஜ.க ஆற்றிய எதிர்வினை என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
அந்த மாநாட்டில் பேசிய ஜார்ஜ் சொரோஸ், “அதானி விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் நரேந்திர மோடி. அவர் அமைதியாகவே இருந்தால், கூட்டாட்சி அரசின் மீதான மோடியின் தலைமையைக் கணிசமாக பலவீனப்படுத்தும். நிறுவன சீர்திருத்தங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும். எனவே, பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும், நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். நான் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கிறேன்” எனப் பேசியிருந்தார்.

ஜார்ஜின் பேச்சு பெரும் பேசுபொருளானதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, “இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு 5-வது நாடாக வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில், திட்டமிட்டு இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் பிரதமரை மட்டுமே விமர்சிக்கவில்லை, மொத்த தேசத்தையுமே விமர்சனம் செய்திருக்கிறார், ஒட்டுமொத்த தேசமும் அணிதிரள வேண்டும். நாட்டின் உள் விவகாரங்களில் இது போன்ற அந்நிய சக்திகள் மூக்கை நுழைப்பதை இந்தியர்கள் ஒன்றிணைந்து தோற்கடிப்பார்கள்” எனக் காட்டமாக பதிலடி தந்திருக்கிறார், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

அதேபோல, “உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் எப்படிச் செயலாற்ற வேண்டும் எனத் தன் கருத்தால் தீர்மானிக்க நினைக்கிறார் ஜார்ஜ் சொரோஸ். அவர் வயதானவர், பணக்காரர் மற்றும் ஆபத்தானவர்” என விமர்சித்திருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்த விவகாரம் தொடர்பாக நம்முடன் பேசிய அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், “ஜார்ஜ் சொரோஸ் யார், அவர் நல்லவரா கெட்டவரா… அவர் என்ன சொல்கிறார்… ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதன் பின்னணி என்ன… வெளிநாட்டவர்கள் இந்தியாவை விமர்சிப்பது தவறு எனச் சொல்லப்படும் கருத்துகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அதானிமீது ஹிண்டன்பர்க் அறிக்கை சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தவேண்டியது யாருடைய கடமை?

அதானி குற்றம் செய்தாரா இல்லையா என்பதை விசாரிப்பதை விட்டுவிட்டு, விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்வது எந்த வகையில் நியாயம்… தற்போது ஜார்ஜ் சொரோஸ் மோசமான ஆள் என விமர்சிக்கிறார்கள், இருக்கட்டுமே, முதலில் அதானி நல்லவரா கெட்டவரா… அவர் தவறு செய்திருக்கிறாரா, இல்லையா என உறுதிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?

இந்தியாவில் செபி-யோ, ஆர்.பி.ஐ-யோ அதானி விவகாரம் குறித்து முழுவீச்சில் செயல்பட்டிருக்க வேண்டுமா இல்லையா… நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் முறையாகச் செயல்பட்டிருந்தால் இந்த விவகாரம் குறித்து யாரால் கேள்வி எழுப்ப முடியும்?
அதானியைக் குறை சொல்பவர்கள் யாரும் பொதுவான விமர்சனப் பார்வையை முன்வைக்கவில்லை. மிகத் தெளிவாகப் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்குச் சென்றது எனக் குற்றம்சாட்டுகிறார்களே… நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் அதானி விவகாரம் குறித்துப் பேசியபோது, அரசாங்கம் இது தொடர்பாக எந்த பதிலும் சொல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே… அவர்கள் முறையாக நடவடிக்கை எடுக்கிறோம் எனச் சொல்லிவிட்டு, அந்த வேலையைச் செய்திருந்தால் எதிர்த்தரப்பினரால் எதுவுமே பேச முடியாமல் போயிருக்கும்.
அரசாங்கம் நினைத்தால் நான்கு நாள்களில் இதை விசாரித்து முடித்திருக்க முடியும். அவர்கள் அதைச் செய்யாததால்தான் அதானியுடன் அவர்கள் நிற்கிறார்களா என்ற கேள்வியே எழுகிறது. அதானி விவகாரத்தை விசாரிப்பதை விட்டுவிட்டு ஜார்ஜ் சொரோஸ் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதே ஒருவித மடைமாற்றம்தான்” என்றார்.

இது குறித்து, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஏதோ இன்றைக்குத்தான் அதானிக்குக் கடன் கொடுத்ததுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்.ஐ.சி., ஸ்டேட் பேங்க்குக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இந்தப் பிரச்னையில் இழுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் அதிகாரத்திலிருந்தபோது பல தனியார் முதலாளிகள் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியபோது, காங்கிரஸ் விளக்கம் கொடுத்ததா… இல்லை. ஆனால், இப்போது பா.ஜ.க அரசில் அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காதபோது தேவையில்லாமல் அதானி விவகாரம் குறித்துப் பேசவேண்டிய தேவை இல்லை. அதே போன்று அதானி விவகாரம் குறித்த கேள்வி எழுப்பியபோது, அந்தந்தத் துறை அமைச்சர்கள் பதில் தந்திருக்கின்றனர். ஆகவே, அதானி விவகாரத்தில் மோடி பேசுவதற்கு ஒன்றுமில்லை. வெளிநாட்டைச் சார்ந்த யாரோ ஒருவர் எதை எதையெல்லாமோ பேசுவதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை” என்கிறார் நாராயணன் திருப்பதி