அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 13 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆசிரம உரிமையாளரான கேரளாவை சேர்ந்த ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 9 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜபருல்லா (70) உட்பட 15 பேர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போயுள்ளனர். தென்காசி மாவட்டம் லட்சுமி அம்மாள் (80), முத்துவிநாயகம் (48) ஆகியோரும் இதே ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரியானா (30) என்பவரை ஆசிரமத்தில் அடைத்து வைத்து ஜுபின் பேபி வன்கொடுமை செய்ததாக புகார் வந்துள்ளது. இந்த புகார்கள் தொடர்பான 4 வழக்குகள் குறித்து பல்வேறு மாநிலங்களில் புலன்விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது.எனவே, இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை வலியுறுத்தல்: இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் – ஒழுங்கு மோசமாகி வருகிறது. தற்போது விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முதியோர், பெண்கள் தாக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு உள்ளனர்.உடல் உறுப்புகளுக்காக பலர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லாஉட்பட 52 பேர் பெங்களூரு ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அங்கும் 14 பேரை காணவில்லை. ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் மரணம் தொடர்பாக முறையான ஆவணங்களும் இல்லை. தமிழகம், கர்நாடகா, ராஜஸ்தான் என 3 மாநிலங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதால், அன்பு ஜோதிஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.