அமெரிக்காவும் ஐரோப்பாவுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் இந்தியா! – ஒரு விரிவான பார்வை

அமெரிக்க விசா கிடைக்குமா, ஐரோப்பிய நாடுகளில் வேலை கிடைக்குமா, வெளிநாட்டில் படித்தால் அங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆகிவிடலாமா என்றெல்லாம் யோசிக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்…

இப்போது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் இடத்தில் இருக்கிறது இந்தியா. இது வெற்றுப் பெருமிதம் அல்ல! அந்த நாடுகளே ஒப்புக்கொண்டிருக்கும் உண்மை.

Air India

கடந்த ஆண்டு வரை மத்திய அரசு நிறுவனமாக இருந்து சமீபத்தில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது ஏர் இந்தியா விமான நிறுவனம். இந்த நிறுவனத்துக்காக 470 விமானங்களைப் புதிதாக வாங்குகிறது டாடா குழுமம். இதில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களும் வாங்குகிறார்கள். இரண்டு ஒப்பந்தங்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 5.8 லட்சம் கோடி ரூபாய். ஆம், பொருளாதார மந்தநிலையால் தவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும், உக்ரைன் போரால் தடுமாறிக் கொண்டிருக்கும் ஐரோப்பாவுக்கும் இந்தியாவிலிருந்து இவ்வளவு பெரிய தொகை சென்று, அவர்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்கப் போகிறது.

போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, டாடா நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடியும் இருந்தார். ஒப்பந்தம் முடிந்ததுமே அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசினார். இவ்வளவு விமானங்களை வாங்குவதற்காக மோடிக்கு நன்றி சொன்னார் பைடன். இந்தியா கொடுத்திருக்கும் இந்த ஒற்றை ஒப்பந்தம், அமெரிக்காவின் 44 மாகாணங்களில் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் நன்றி சொன்னார்.

ஜோ பைடன் – மோடி

இதேபோல ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தொடர்பில் இருந்தார். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அவர் மோடிக்கு நன்றி சொன்னார். அதேபோல பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் மோடிக்கு நன்றி சொன்னார். ஏர்பஸ் விமானங்களுக்கான இன்ஜின் மற்றும் முக்கியமான பாகங்களை பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்தான் செய்து தருகிறது. இதனால் பிரான்ஸ், பிரிட்டன் என்று பல நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.  

போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்கள்

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்தன. அந்த சூழ்நிலையிலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா. அதற்காக இந்தியாவை அந்த நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்தன. என்றாலும், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. அப்போது விமர்சனம் செய்த அந்த நாடுகளுக்கே இந்த ஒப்பந்தங்கள் போயிருக்கின்றன.

ஏர் இந்தியாவை வாங்கியபிறகு டாடா நிறுவனம் அதை விரிவுபடுத்துவதற்காக எடுத்திருக்கும் முதல் நடவடிக்கை இது. உலகிலேயே ஒரு விமான நிறுவனம் ஒரே நேரத்தில் 470 விமானங்கள் வாங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு 460 விமானங்களை வாங்கியதே சாதனையாக இருந்தது.

இந்திய சாதனை என்று பார்த்தால், கடந்த 2019-ம் ஆண்டு இண்டிகோ நிறுவனம் ஒரே நேரத்தில் 300 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது. ஆனால், கொரோனா காரணமாக அதில் பெருமளவு விமானங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தது. இப்போது அவற்றை மீண்டும் வாங்க உத்தேசித்துள்ளது. எனவே, இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, வளர்ந்த நாடுகள் பலவற்றுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

Air India

ஏர் இந்தியா இப்போது ஏர்பஸ் நிறுவனத்தில் வாங்கும் 250 விமானங்களில் 40 பெரியவை. சராசரியாக 350 பேர் வரை பயணிக்க முடிகிற ரகங்கள். இதேபோல போயிங்கில் வாங்குவதில் 30 விமானங்கள் பெரியவை. இவற்றில் 250 பேர் முதல் 380 பேர் வரை பயணம் செய்ய முடியும். சர்வதேசப் பயணங்களுக்கான இந்திய விமான சேவையில் ஏர் இந்தியாவே முன்னணியில் இருக்கிறது. என்றாலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுடன் அதனால் போட்டியிட முடியவில்லை. அந்த நிறுவனத்திடம் இப்போது இருக்கும் 140 விமானங்களில் பலவும் சிறிய ரக விமானங்கள். உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் விமானப் பயண மார்க்கெட்டாக இந்தியா இருக்கிறது. எனவே, நீண்ட தூரப் பயணங்களுக்கான பெரிய விமானங்களை ஏர் இந்தியா அதிகம் வாங்குகிறது.

எனினும் இந்தியாவுக்குள் பயணம் செய்யும் உள்நாட்டு விமானப் பயண மார்க்கெட்டில் இண்டிகோ நிறுவனமே அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. மொத்த பயணிகளில் 55% பேர் அந்த நிறுவன விமானங்களையே பயன்படுத்துகிறார்கள். இதில் ஏர் இந்தியாவின் பங்கு வெறும் 9% மட்டுமே! இதையும் அதிகரிக்கவே ஏராளமான விமானங்களை ஏர் இந்தியா வாங்குகிறது.
இப்போது இருக்கும் விமானங்களில் பலவும் இயங்கும் நிலையில் இல்லாததால், அவற்றையும் பழுது பார்க்க வேண்டிய கட்டாயத்தில் ஏர் இந்தியா இருக்கிறது. அதுவுமே போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு பெரிய ஜாக்பாட் பரிசாக இருக்கும்.

Air India

புதிய விமானங்களில் முதல் செட் இந்த ஆண்டு இறுதியில் வர ஆரம்பிக்கும். அதன்பின் மற்றவையும் 2025-ம் ஆண்டுக்குள் வந்து சேரும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த இரண்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களை பிஸியாக வைத்திருக்கப்போகிறது இந்தியா. அமெரிக்காவின் போயிங் நிறுவன விமானங்கள்தான் இந்தியாவில் அதிகம் பறக்கும்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலானது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதி நெருக்கடியில் தவிப்பது போன்ற பிரச்னைகளால் போயிங் விமானங்களின் விற்பனை குறைந்திருந்தது. இன்னொரு பக்கம் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் தடுமாறிக் கொண்டிருந்த போயிங் நிறுவனத்துக்கு இந்தியா உயிர் கொடுத்திருக்கிறது.

ஏற்கெனவே ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் என்று இரண்டு அரசு விமான நிறுவனங்கள் இருந்தன. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

அதன்பின் ஏர் இந்தியாவின் நஷ்டம் இன்னும் அதிகமானது. ஏர் இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவை தருவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்று தனியாக நிறுவனம் இருக்கிறது. இதுவும் இப்போது டாடா வசம் போயுள்ளது. இதுதவிர ஏர் ஏசியா இந்தியா நிறுவனமும் டாடா வசம் இருக்கிறது.

இதுதவிர சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து `விஸ்தாரா’ என்ற விமான நிறுவனத்தையும் நடத்துகிறது டாடா குழுமம். இந்த எல்லா நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கத் திட்டமிடல் நடக்கிறது.
சரி, புதிதாக 470 விமானங்களை வாங்குவதற்கு 5.8 லட்சம் கோடி ரூபாயை எங்கிருந்து டாடா நிறுவனம் திரட்டும்? விமான நிறுவனங்களின் சேவையில் இருக்கும் விநோதங்களை இந்த இடத்தில் தெரிந்துகொள்வது நலம்.

Air india

மொத்தமாக 470 விமானங்களை வாங்குவதால், ஏர் இந்தியாவுக்கு சலுகை விலையில் அவை கிடைக்கும். பேரம் பேசி விலை குறைத்தே வாங்குவார்கள். இதற்கான நிதியை வங்கிகளில் கடனாகப் பெற முடியும். அதன்பின் அந்த விமானங்களை குத்தகை நிறுவனங்களுக்கு விற்பார்கள்.
உதாரணமாக, எக்ஸ் என்று ஒரு நிறுவனம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் ஏர் இந்தியாவிடமிருந்து 10 விமானங்களை விலைக்கு வாங்கிக்கொள்ளும். தான் பேரம் பேசி வாங்கிய விலைக்கு மேல் ஒரு லாபம் வைத்து ஏர் இந்தியா இப்படி விற்றுவிடும்.

இதில் கிடைக்கும் பணத்தை வைத்து, வாங்கிய கடனை ஏர் இந்தியா அடைத்துவிட முடியும். அதன்பின் அந்த விமானம் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாகிவிடும். எக்ஸ் நிறுவனத்திடம் இப்படிப் பல விமானங்கள் இருக்கும். ஆனால், அது விமானப் போக்குவரத்து நிறுவனம் இல்லை. அது ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் என்று பல நிறுவனங்களுக்கு விமானங்களை குத்தகைக்கு வழங்கும். இதற்காக ஒரு தொகையைப் பெற்றுக்கொள்ளும்.

Airlines

பல விமான நிறுவனங்கள் இப்படித்தான் இயங்குகின்றன. பணியாளர்கள் சம்பளம், விமான எரிபொருள் செலவு, விமான நிலையக் கட்டணங்கள் என்று பெருந்தொகையை செலவிட வேண்டியிருப்பதால், சொந்தமாக விமானம் வாங்கிப் பராமரிக்கும் செலவையும் விமான நிறுவனங்கள் செய்வதில்லை. குத்தகையில்தான் விமானங்களை வாங்குகின்றன. ஏர் இந்தியாவின் புண்ணியத்தில் ஏராளமான விமானங்கள் இந்தியாவுக்கு வருவதால், விமானப் பயணம் சார்ந்த வேலைவாய்ப்புகள் பெருகலாம். விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம். நடுத்தர மக்களுக்கு அது நன்மையாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.