ஈரோடு கிழக்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனி தபால் அலுவலகம் பகுதியில் நேற்றைய தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான செல்வராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஏற்கெனவே இந்தத் தொகுதியில் த.மா.கா போட்டியிட்ட நிலையில், அவர்களிடமிருந்து பறித்து இந்தத் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இங்கு அ.தி.மு.க போட்டியிடவில்லை.

பா.ஜ.க-தான் அ.தி.மு.க-வை போட்டியிட வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களுள் யார் பெரியவர்… யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று போட்டியிடவே, டெல்லியிலுள்ள இவர்களின் சட்டாம்பிள்ளை (பிரதமர் மோடி) யார் போட்டியிட வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறார். யாரிடம் அ.தி.மு.க இருக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சியின் தொண்டர்கள்தானே முடிவு செய்ய வேண்டும். யார் பெரியவர் என்பதை தமிழக வாக்காளர்கள்தானே முடிவு செய்ய வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க-வுக்கு இப்போது யார், யாரோ சட்டாம்பிள்ளையாக வலம் வருகிறார்கள்.
பா.ஜ.க-வை எதிர்த்து அ.தி.மு.க-வால் பேச முடியுமா என்றால் அவர்களால் பேச முடியாது. இது இன்று மட்டும் அல்ல, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட பேச மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தன்னை பரமசிவனின் கழுத்திலுள்ள பாம்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில், அவர் கழுத்தில்தான் ஒரு நச்சுப்பாம்பு சுற்றியிருக்கிறது. அதை நாங்கள் அவரிடம் பலமுறை சொல்லி விட்டோம். ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது என்ற பழமொழியுடன், பா.ஜ.க. நுழைந்த மாநிலமும் உருப்படாது என்று சேர்த்துக்கொள்ளலாம்.
தற்போது பா.ஜ.க ஆட்சிபுரிந்து வரும் உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் பிழைப்புத் தேடி நம்முடைய தமிழகத்துக்கு வருகிறார்கள். வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும், பஞ்சமும் அங்கிருப்பதால்தான் பிழைப்பு தேடி இங்கே வருகிறார்கள். அங்கு வறுமையும், வேலை இல்லாத நிலைமையும்தான் மேலோங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியைப் புரிபவர்கள்தான் தமிழகத்தில் எப்படி ஆட்சி செய்வது என்று நமக்கு பாடம் எடுக்கிறார்கள். முதலில் பா.ஜ.க-வினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கட்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம். தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, ஒரு மூன்றாம் தர பேச்சாளரைப் போல பேசுகிறார். தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுக்காலம் இருக்கிறது. அதற்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒரு புத்திசாலித்தனமான அரசு, உடனடியாக மக்களுக்கு எது தேவை, வளர்ச்சிக்கு எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வரிசைப்படுத்திதான் திட்டங்களை நிறைவேற்றும்.

அதன்படி தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது கொராேனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வந்ததால், அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். கொராேனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்காக இல்லம் தேடிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்புடன் நிறுத்தி விடக்கூடாது என்று கல்லூரி படிப்புக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிறார். இது பணம் இல்லையா… பிற மாநில பெண்கள், தமிழகத்தில் பிறக்கவில்லையே என்று வருத்தப்படும் அளவுக்கு பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணச் சலுகை தரவில்லையா… கொரோனா உதவித்தொகை ரூ. 4,000, மகளிர் குழுக்களுக்கு நிதி என்று கொரானா தடுப்பு, கல்வி ஆகியவற்றுக்கு இந்த அரசு பல வகைகளிலும் முக்கியத்துவம் அளித்திருக்கிறது.
தமிழகத்திலுள்ள 8 கோடி மக்களின் பிரதிநிதியாக 234 எம்.எல்.ஏ-க்களை சட்டப்பேரவைக்கு அனுப்பி அவர்கள் மூலமாகத்தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் ஆன்லைன் ரம்மி தடை, நீட் தேர்வு ரத்து செய்வது உள்ளிட்ட 19 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருக்கிறார். மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே ஆளுநருடைய பணி. ஆனால் மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில்தான் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார்.
தமிழர்களின் உரிமைகளை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுவது பா.ஜ.க-தான். இவர்களே அ.தி.மு.க-வை இயக்குகிறார்கள். தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று பா.ஜ.க-வினரால் கூற முடியுமா?
தமிழகத்துக்கு வர வேண்டிய உணவு மானியம் குறைப்பு, பெட்ரோல் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களையும் மத்திய அரசு முற்றிலும் ரத்து செய்துவிட்டது. இதன் காரணமாக விலைவாசிதான் உயரும். இதுபோன்ற மக்களுக்கு எதிரான செயல்களை எப்போதாவது அ.தி.மு.க தட்டிக் கேட்டிருக்கிறதா. 2022-23-ம் ஆண்டில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகையான 3,34,339 கோடி ரூபாயை இன்னும் பிரித்து வழங்காமல் இருக்கிறது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 65,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். இந்தத் தொகையை மத்திய அரசு வழங்கியிருந்தால் சாலை மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரப் பணிகள் என பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைச் செய்து முடித்திருக்க முடியும். ஆனால் மத்திய அரசோ, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 3,34,339 கோடி ரூபாயை ரூ.2,70,000 கோடியாக குறைத்துவிட்டது.

இந்தத் தொகையை ஏன் மாநிலங்களுக்கு வழங்கவில்லை என்று மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டித்து பேசி வருகின்றன. ஆனால், என்றாவது அ.தி.மு.க-வினர் இது குறித்துப் பேசியிருக்கிறார்களா… இந்தித் திணிப்பையும், ஒரே நாடு, ஒரே தேர்தல், பண வீக்கம், வேலையின்மை போன்ற பல விஷயங்களிலும் பா.ஜ.க அரசை நாங்கள் கண்டித்திருக்கிறோம். இதை என்றாவது ஒருமுறையாவது அ.தி.மு.க கண்டித்திருக்கிறதா, பா.ஜ.க-வின் நடவடிக்கைகளால் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்தும் மக்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. நடப்பு 2023-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, ஏற்றுமதி குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும். வேலையின்மை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக வங்கி, சர்வதேச நிதியம், ஐ.நா சபை போன்ற அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. உலக நாடுகளே இந்த அமைப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி திட்டங்களை வகுக்கின்றன. ஆனால், பா.ஜ.க அரசு மட்டும் இந்த ஆலோசனைகளை கேட்பதும் இல்லை. அதை பின்பற்றுவதும் இல்லை.

ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டால் ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், மத்திய அரசு எப்போதும் வரிமேல் வரி விதித்து மக்களைத் தொடர்ந்து துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. இதையெல்லாம் அ.தி.மு.க என்றுமே தட்டிக் கேட்டதில்லை. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வை நிறுத்தி வெள்ளோட்டம் பார்க்கிறது பா.ஜ.க. இன்னும் 14 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பலம் என்ன என்பதை வெள்ளோட்டம் பார்ப்பதற்காகவே பா.ஜ.க. போட்டியிடுவதை தவிர்த்துவிட்டது. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லையே என்று நீங்கள் நினைப்பீர்கள். மிக விரைவில் உங்கள் மனதில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது உட்பட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். எனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் விமர்சனங்களை தாங்க முடியவில்லை. பிரதமர் மோடி, தன்னை விமர்சனம் செய்பவர்களை எதிர்க்கிறார். ஊடகங்கள் கேள்வி எழுப்பி, ஆட்சி குறித்து விமர்சித்தால் மிரட்டப்படுகின்றன. சீனா, ரஷ்யா, எகிப்து நாடுகளில் இருந்த நிலை இப்போது இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.