புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263, இந்தியா 262 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது. ஹெட் (39), லபுசேன் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (43), மார்னஸ் லபுசேன் (35) ஆறுதல் தந்தனர். ஸ்டீவ் ஸ்மித் (9), மாத்யூ ரென்ஷா (2), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் (0), அலெக்ஸ் கேரி (7) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 113 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 7, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர்.

சுலப வெற்றி
பின், 115 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (1) ஏமாற்றினார். கேப்டன் ரோகித் சர்மா (31) ஓரளவு கைகொடுத்தார். விராத் கோஹ்லி (20), ஸ்ரேயாஸ் (12) நிலைக்கவில்லை. பின் இணைந்த புஜாரா, ஸ்ரீகர் பரத் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது. புஜாரா (31), பரத் (23) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ஜடேஜா தட்டிச் சென்றார். இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் இந்துாரில் மார்ச் 1ல் துவங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement