ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு எதிராக தீவிர அரசியலை முன்னெடுத்துவருகிறார். குறிப்பாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.

இந்த நிலையில், தெலங்கானாவை இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், கே.சி.ஆர்-ஐ தாலிபன் என்றும் சாடியிருக்கிறார் ஷர்மிளா.
மஹ்பூபாபாத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஷர்மிளா, “கே.சி.ஆர் ஒரு சர்வாதிகாரி. தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு இல்லை. கே.சி.ஆரின் அரசியலமைப்பு மட்டுமே இங்கு இருக்கிறது. இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலங்கானா. இதில் கே.சி.ஆர்-தான் தாலிபன்” என்று கூறினார்.
இந்த நிலையில், ஆளுங்கட்சியின் மஹபூபாபாத் எம்.எல்.ஏ சங்கர் நாயக்கை தகாத வார்த்தைகளைச் சொல்லி விமர்சித்ததற்காக, ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஒய்.எஸ்.ஷர்மிளா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்றைய பொதுக்கூட்டத்தில், “மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்த நீங்கள், அதை நிறைவேற்றவில்லை. உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நீங்கள் ஒரு கொஜ்ஜா என்று அர்த்தம்” என மஹபூபாபாத் எம்.எல்.ஏ-வை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.