கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவின்போது ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த சமய மாநாட்டிற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாநாடு நடைபெற உள்ளதால் ஹைந்துவ சங்கம் மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தடையை மீறி மாநாடு நடத்தப்படும் என இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் அறிவித்தன. மேலும் காவல்துறையினர் தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கும் போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பாணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மண்டைக்காட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வருபவர்களை அந்தந்த பகுதிகளில் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டைக்காட்டிற்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோயில் டெரிக் சந்திப்பு பகுதியில் இன்று காலை முதல் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று பறக்கை விலக்கு, பத்தளம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது