ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட, அக்கட்சியின் நிர்வாகி R. சீனிவாசன் என்பவர் வீடு திரும்பும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கல பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், “ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. R. சீனிவாசன் அவர்கள், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வீடு திரும்பியபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் திரு. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முன்னதாக கடந்த 4 நாட்களுக்குமுன் இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அண்ணா கிராமம் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர் கந்தன் (வயது 51) மயங்கிவிழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.