கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023: 37 வருஷ வரலாறு… ஆட்டத்தை மாற்ற காய் நகர்த்தும் பாஜக!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 தொடர்பான அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. 1978 வரை
காங்கிரஸ்
கட்சியே தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

அதன்பிறகு நடந்த இரண்டு தேர்தல்களில் ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. 1985க்கு பின்னர் ஒரே கட்சி அடுத்தடுத்து ஆட்சி அமைத்த நிகழ்வுகள் அரங்கேறவில்லை. குறிப்பாக 2004 மற்றும் 2018 ஆகிய சட்டமன்ற தேர்தல்களை அடுத்து ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை.

தனிப் பெரும்பான்மை

அதுமட்டுமின்றி 1990க்கு பின்னர் எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனால் கூட்டணி ஆட்சியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை பாஜக மாற்றி எழுதும் வண்ணம் தீவிரம் காட்டி வருகிறது. பலகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளை களத்தில் இறக்கி விட்டுள்ளது. கடந்த தேர்தலில் செல்வாக்கு சரிந்திருந்த இடங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வியூகம் வகுத்துள்ளது.

பாஜகவின் பிளான் 5B

இதற்காக ‘5B’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. நடப்பு சட்டமன்ற தேர்தலில் களம் மும்முனை போட்டியாக அமைந்துள்ளது. இந்த மூன்று கட்சிகளும் வாக்கு வங்கியில் பெரிதும் மாறுபட்டு காணப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மாநிலம் தழுவிய அளவில் வாக்கு வங்கி உள்ளது. பாஜகவிற்கு வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் வாக்குகள் இருக்கின்றன.

சமூக ரீதியிலான வாக்குகள்

2000ஆம் ஆண்டிற்கு பின்னர் இக்கட்சி லிங்காயத் வாக்குகளை பெரிதும் நம்பி வருகிறது. அதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பங்கும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒக்கலிகா வாக்குகள் அதிகமுள்ள தெற்கு மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி உள்ளது. இந்த அரசியல் கணக்குகளில் அவ்வப்போது சிறிய அளவிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகள்

கர்நாடக மாநில அரசியலில் லிங்காயத், ஒக்கலிகா ஆகிய சமூக வாக்குகள் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதிரவைத்த நீதிபதி

கடந்த ஆண்டு கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியே, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு கோப்புகளும் அடுத்தகட்டத்திற்கு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இவற்றை எல்லாம் மீறி வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெறப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.

கடைசி நேர ட்விஸ்ட்

இந்த தேர்தலை ஒட்டி பாஜக முன்னிறுத்தும் விஷயங்களாக மருத்துவக் காப்பீடு, ஏழைகளுக்கான கிளினிக்குகள், கெம்ப கவுடா சிலை திறப்பு, லிங்காயத், ஒக்கலிகா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதுதவிர தேர்தல் அறிக்கையும், கடைசி நேர ஸ்வீட் பாக்ஸ் விநியோகமும் மக்களின் வாக்குகளை பெரிதும் மாற்றும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.