கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ராணுவ கர்னல் மற்றும் காங்கிரஸ் எம்பி ஆகியோர் ஆறுதல் கூறினர்.
கிருஷ்ணகிரி வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபு (28). இவரைக் கடந்த 8-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபு கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ராணுவ கர்னல் தலைமையிலான 5 ராணுவ வீரர்கள் வேலம்பட்டியில் உள்ள பிரபுவின் குடும்பத்தினரை சந்தித்து நேற்று ஆறுதல் கூறினர். அப்போது, பிரபுவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிரபுவின் அண்ணன் ராணுவ வீரர் பிரபாகரனிடம், கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்தனர்.
மேலும், கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரபுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் எம்பி கூறியதாவது: ராணுவ வீரரின் உயிரிழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். பொறுமை இல்லாத காரணத்தால் வன்முறை நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பிரபுவின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளையும், அவரது மனைவிக்கு நிரந்தர பணி வழங்குவது தொடர்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவர் சேகர், முன்னாள் நிர்வாகிகள் நாஞ்சில் ஜேசு, கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.