கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், பழியஞ்சியநல்லூரில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இங்குள்ள பாசன வாய்க்காலின் பக்கவாட்டில் சிமெண்ட் கான்கிரீட் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் நவீன இயந்திரம் மூலம் ரெடிமேட் சிமெண்ட் கலவை அப்பள்ளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளத்தில், மயிலாடுதுறையிலுள்ள கல்லூரியில் பிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் மகாராஜபுரம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகைய்யன் மகன் சண்முகம்(20) நேற்று விடுமுறை நாட்கள் என்பதால், அங்கு கூலி வேலைக்குச் சென்று வேலை செய்து வந்தார்.
அப்போது, அப்பள்ளத்தில் சிமெண்ட் கலவை கொட்ட வந்த லாரி, நிலைதடுமாறி, சண்முகம் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் சண்முகம் அதே இடத்தில் உயிரிழந்தார், இது குறித்து திருநீலக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் கூலித் தொழிலாளியான கல்லூரி மாணவன் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஆறுதல் கூறுவதற்கு கூட வராத கட்டிட நிறுவனத்தை கண்டித்து, கும்பகோணம் அரசு மருத்துவமனை வாயிலில் முன் சாலை மறியல் போராட்டத்தில் அவரது உறவினர்கள் ஈடுபட்டனர். இது குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒய்.ஜாபர்சித்திக் மற்றும் போலீஸார், உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.