கே.பி முனுசாமி பணம் கேட்டது உண்மை தான் – டைம் பார்த்து அடித்த ராஜேந்திர பாலாஜி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்பதாக ஓபிஎஸ் தரப்பு அண்மையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த ஆடியோவை வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, கேபி முனுசாமி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சியில் எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பொறுப்புகள் வாங்கிக் கொடுப்பதாக கூறி பல பேரிடம் அவர் பணம் வசூலித்து ஏமாற்றியிருப்பதாகவும், என்னிடமும் முனுசாமி பணம் ஒரு கோடி ரூபாய் கேட்டார் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கேபி முனுசாமி, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தியுடன் பணம் கேட்கிறார்.

பின்னர் பேசிய கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, முனுசாமி பணம் இருக்கும் பக்கம் ஒட்டிக் கொள்பவர். அவர் ஓபிஎஸ் குறித்து பேசக்கூடாது. மீறி பேசினால் இன்னும் பல ஆடியோக்கள் மற்றும் வீடியோ வெளியாகும். தங்கமணி மற்றும் வேலுமணி பேசிய இரண்டு மணி நேர வீடியோ கூட எங்களிடம் இருக்கிறது. ஓபிஎஸ் குறித்து இனி மேலும் அவர்கள் தரக்குறைவாக விமர்சித்தால் வீடியோக்கள் நிச்சயம் வெளியாகும் என எச்சரித்தார். ஆடியோ குறித்து விளக்கம் அளித்த முனுசாமியும், அந்த குரல் தன்னுடையது தான் என்று ஒப்புக் கொண்டார். 

கட்சி விவகாரங்களுக்காக தனிப்பட்ட முறையில் பேசியதை எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக ஓபிஎஸ் அணி தவறான முறையில் தன்னை சித்தரிப்பதற்கு இப்படி தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவதாகவும் முனுசாமி குற்றம்சாட்டினார். ஆடியோ, வீடியோ என எதுவாக இருந்தாலும் ஓபிஎஸ் அணியினர் வெளியிடட்டும். அதைப் பற்றி துளியும் கவலையில்லை என்றும் பதிலடி கொடுத்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேபி முனுசாமி ஆடியோ விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கேபி முனுசாமி பணம் கேட்டார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் எம்.எல்.ஏ சீட்டுக்காக பணம் கேட்டார் என்பது உண்மையில்லை. ஆனால் அரசியலை பொறுத்தவரை கொடுக்கல் வாங்கல் இருக்கும். கட்சி பணிகளுக்காக பல்வேறு நபர்களிடம் பேசுவார்கள். இது அரசியலில் சகஜம். இந்த ஆடியோவை எல்லாம் வெளியிடுவது நாகரீமற்ற செயல் என விளக்கம் அளித்திருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.