தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க அரசைக் கண்டித்து, வரும் 21-ம் தேதியன்று சென்னையில், அறப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திறனற்ற தி.மு.க ஆட்சியிலே, சட்டம் ஒழுங்கின் நிலை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகளின் கரத்திலே இருக்க வேண்டிய விலங்குகள் காவல்துறையின் கைகளுக்குப் போடப்பட்டிருக்கிறது. தி.மு.க-வினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

பட்டப்பகலில், நாட்டைக் காத்த பிரபு என்கிற ராணுவ வீரர், தி.மு.க-வின் நிர்வாகியால் படுகொலைசெய்யப்படுகிறார். சட்டமும், காவல்துறையும், தன்னை ஒன்றும் செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார். பா.ஜ.க-வின் பட்டியலினப் பிரிவின் தலைவர் திரு தடா பெரியசாமி அவர்களின் இல்லத்தின்மீதும், கார்மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி, அவரின் பாதுகாப்புக்காக த் துப்பாக்கி ஏந்திய காவலரை நியமிக்க வேண்டி, காவல் உயர் அதிகாரியிடம், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தாக்குதலும், இழப்பும் நேரிட்ட பிறகு பாதுகாப்பு வழங்கி என்ன பயன்… மதுவினால் ஏற்படும் தீமைகளை அறிந்திருந்தும், அதிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கொள்ளை லாபத்துக்காக, மக்களை மதுவுக்கு அடிமைகளாக, இந்த தி.மு.க அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக, மாவட்ட ஆட்சியரே, மனம் திறந்து பேசியிருக்கிறார்.

எல்லா மட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள், சரளமாகக் கிடைக்கின்றன. வயது வித்தியாசம் இன்றி சின்னஞ்சிறார்களும் அதை எளிதாகப் பெறமுடிகிறது. இந்த கேவலங்களுக்குப் பெயர்தான் திராவிட மாடலா… இலவசங்களுக்கும், இரண்டு, மூவாயிரம் ரூபாய்க்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், தி.மு.க ஆட்சியைக் கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. தமிழகம் இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் 21.02.2023 அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகிலிருந்து, போர் நினைவுச்சின்னம் வரை, திராவிட மாடல் இருளைப் போக்கும் விதமாக, மெழுகுவத்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெறவிருக்கிறது. முன்னதாக, நாட்டைக் காக்கும் ராணுவ வீரரை நடுத்தெருவிலே அடித்துக் கொன்ற தி.மு.க-வைக் கண்டித்து, அதே பிப்ரவரி 21-ம் தேதி அன்று காலை 9:30 மணியளவில் ஆடம்ஸ் சாலை எனும் சிவானந்தா சாலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவிருக்கிறது.

தி.மு.க அரசுக்கு, சட்டம், ஒழுங்கு பற்றிய கவலை இல்லை, பெண்கள் பாதுகாப்பு பற்றிய கவலை இல்லை, பயிர், விவசாயிகள் பற்றிய கவலை இல்லை, கல்வி, மாணவர்கள் பற்றிய கவலை இல்லை, வணிகம், வியாபாரிகள் பற்றிய கவலை இல்லை, தொழில், முன்னேற்றம் பற்றிய கவலை இல்லை, மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய கவலை இல்லை, மத்திய அரசின் மகத்தான திட்டங்களை எல்லாம் அமல்படுத்த வேண்டும் என்று எண்ணமில்லை.

ஆனால், மக்களை ஏமாற்றி ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும், தி.மு.க-வின் அனைத்து மட்டத்திலும் மேலோங்கி இருக்கிறது. தமிழக மக்கள் எல்லாம், ஆட்சியாளர்களையும் அவர்களின் அத்துமீறல்களையும் அராஜகங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு உணர்த்துவதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம். தமிழக மக்களுக்கான இந்த அறப்போராட்டத்தில், கலந்துகொண்டு இந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க-வின் சார்பிலே வேண்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.