சம்பாதிக்கும் பணத்தை எப்படி சேமிக்க வேண்டும்? – வழிகாட்டும் ஜப்பானியர்கள்! | பர்சனல் ஃபைனான்ஸ்-6

நம்மில் பலர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாக செலவு செய்து விடுகிறோம்.

நாம் சம்பாதிக்கும் பணம் என்பது சம்பாதிக்கும் காலத்தில் செலவு செய்ய மட்டும் அல்ல; பணி ஓய்வு பெற்ற வயதான காலத்துக்கும் சேர்த்துதான் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். அந்த வகையில், எதிர்கால தேவைகளுக்கு என்று சம்பளத்தில், சம்பாத்தியத்தில் சேமித்து வருவது அவசியமாகும்.

மாத சம்பளதாரர்கள் செய்ய வேண்டியது…

சம்பளத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

சம்பளத்தில், சம்பாத்தியத்தில் ஒருவர் எவ்வளவு தொகையை, எவ்வளவு சதவிகிதத்தை சேமிக்க வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

சம்பளம் வாங்குபவர்கள்தான் சேமிக்க வேண்டும் என பலரும் நினைக்கிறோம். அது பெரிய தவறாகும். சம்பாதிக்கும் அனைவரும்  அதாவது தொழில் செய்பவர் கூட அதில் ஒரு பகுதியை சேமிப்பது மிக அவசியமாகும். அப்போதுதான் ஏதாவது ஓர் அவசரச் செலவு என்றால் அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் அல்லது கடன் வாங்காமல் நிலைமையை சமாளிக்க முடியும்.

குடும்ப பட்ஜெட் போடும் போது அதில், சம்பளத்தில் 50% அவசிய செலவுகளுக்கு, 30 சதவிகிதம் சேமிப்புக்கு, 20% ஆசைகளுக்கு என பிரிக்க வேண்டும் என பார்த்தோம்.

சம்பளத்தில் 30 சதவிகித தொகையை சேமிக்க வேண்டும் என்கிற போது குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். பிறகு எப்படித்தான் சேமிக்க வேண்டும் என்கிறீர்களா?

சம்பளம் அதிகரிக்கும் போது…

வேலைக்கு சேர்ந்த புதிதில் சொந்த வீடு இருக்கிறது என்றால் வாடகை செலவு இருக்காது. அது போன்றவர்கள் திட்டமிட்டப்படி சம்பளத்தில் சுமார் 30 சதவிகித தொகையை சேமிக்க ஆரம்பித்துவிடலாம்.

சம்பளம்

மற்றவர்கள் சுமார் 5 சதவிகிதத்தில் ஆரம்பித்து படிப்படியாக சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க சேமிப்பு விகிதத்தை அதிகரித்து கொள்வது சரியாக இருக்கும்.  ஐந்து சதவிகிதத்தில் தொடங்கிய சேமிப்பு சுமார் 5, 6 ஆண்டுகளில் 25% அல்லது 30% அளவுக்கு அதிகரிக்க வேண்டும். மேலும் வயதாக வயதாக சம்பளத்தில் சேமிக்கும் சதவிகிதம் அதிகரிக்க வேண்டும். திருமணமாகி குழந்தை பிறகு இந்தச் சேமிப்புகளை  நிதி இலக்குடன் இணைப்பது அவசியமாகும்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு 32 வயது. அவரின் மாதச் சம்பளம் ரூ.50,000 என வைத்துக் கொள்வோம். அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் 3 வயது மற்றும் 2 வயதில் இருக்கிறார்கள்.  இவர் அவரின் சம்பளத்தில் 20% அதாவது ரூ.10,000 சேமிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

குறுகிய கால தேவைகளுக்கு (ஆயுள் காப்பீடு மற்றும் காப்பீடுகளுக்கு ஆண்டு பிரீமியம் கட்ட) மாதம் ரூ.4,000 என சேமிக்கிறார். இது போக உள்ள ரூ.6,000-ஐ இரு பிள்ளைகளின் உயர்கல்விக்காக தலா ரூ.3,000 வீதம் டாப் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்.  இப்படி சம்பளத்தில் சேமிக்கும் தொகையை நிதி இலக்குகளுடன் இணைக்கும் போது அந்தச் சேமிப்பு தடை படாததுடன், இலக்குகள் நிறைவேறும் வரை தொடரும் எனலாம்.

முதலீடு

இதுவே இவரின் சம்பளம் ரூ. 75,000 என்பது போல் அதிகரிக்கும் போது செலவை அதிகரிக்காமல் சம்பளத்தில் சேமிக்கும் தொகையை அதிகரிக்க வேண்டும். கூடவே சதவிகிதத்தை 30%, 35%, 40% என்பது போல் உயர்த்த வேண்டும். சம்பளம் 75,000 ரூபாயாக அதிகரித்திருக்கும் நிலையில் அவர் சம்பளத்தில் 30%  சேமிக்க வேண்டும். அதாவது ரூ. 22,500 சேமிக்க வேண்டும். இதுவே சம்பளம் ரூ.1 லட்சமாக உயரும் போது அவர் சம்பளத்தில் 40% சேமிக்க வேண்டும்; அதாவது, ரூ.40,000 சேமிக்க வேண்டும்.

சேமிக்க வழிகாட்டும் ஜப்பானியர்கள்..!

ஜப்பானியர்களை பொறுத்த வரையில் அவர்களின் வாழ்க்கை வசதி மேம்படும் வரை மிகவும் சிக்கனமாக இருக்கிறார்கள். அவர்கள் சம்பளத்தில் சாதாரணமாக 45%, 50% என சேமிக்கிறார்கள். நன்றாக சேமித்து பெரும் செல்வம் சேர்த்த பிறகுதான் அவர்கள் ஆசைக்கு செலவிட தொடங்குகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்து வருகிறார்கள். இந்தியர்களும் ஐப்பானியர்களின் சேமிப்பு பழக்கத்தை பின்பற்றினால் வாழ்க்கை நிச்சயம் வளமாகும்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com

கோவிட் 19 கற்றுத் தந்த பாடம்..!

கோவிட் 19 பாதிப்பின் போது சம்பளத்தில் 30 சதவிகிதத்துக்கு மேல் பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் எல்லாம் நிலைமையை சுலபமாக சமாளித்திருக்கிறார்கள். மேலும், கோவிட் நமக்கு பல நிதிப் பாடங்களை கற்று தந்திருக்கிறது.

மிக முக்கியமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு அதிக கவரேஜ் கொண்ட ஆயுள் காப்பீடு பாலிசி, அடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் போதிய கவரேஜ் தொகையுடன் மருத்துவக் காப்பீடு அவசியம் என கற்றுத் தந்துள்ளது.

அடுத்து ஆசைகளுக்கு என கண்டபடி செலவு செய்யவில்லை என்றால் பெரும் பணம் மிச்சமாகும் என கற்றுக் கொடுத்துள்ளது. கொரானா பாதிப்பு காலத்தில் வீட்டை விட்டு அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்தோம். திரையங்குகள், உணவகங்கள் செல்வது தடைபட்டது; இதனால், பெரும் பணம் மிச்சமானது.

சம்பளதாரர்கள் செய்ய வேண்டியது…

வேலைக்கு சேர்ந்து சில ஆண்டுகளிலேயே சம்பளத்தில் 30 சதவிகித சேமிப்பு என்பதை 40%, 50% உயர்த்தினால் எந்தத் தேவைக்கும் கடன் வாங்க வேண்டி வராது. இதேபோல், பணி ஓய்வு பெற இன்னும் சுமார் 5 ஆண்டுகளே இருக்கிறது என்கிற நிலையில் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் சேமிப்பை மிகவும் அதிகரிக்கும் போது, அதிக தொகுப்பு நிதி சுலபமாக சேரும்.

வாரன் பஃபெட்

இப்படி சம்பளத்தில் சேமிக்கும் பணத்தை உடனடியாக வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து அதிக வருமானம் தரும் திட்டங்களுக்கு மாற்றுவது மூலம் பணத்தை மேலும் பல மடங்கு பெருக்க வைக்கலாம். அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நிச்சயம் கைகொடுக்கும்.

சம்பளம், சம்பாத்தியத்தில் 10% கூட சேமிக்க முடியவில்லை என்றால் ஒருவரின் செலவுகளைக் குறைக்க வேண்டும்: அல்லது அவரின் வருமானத்தை உயர்த்த வேண்டும்.

செலவு போக சேமிப்பு என்பது தவறான அணுகுமுறையாகும். சேமிப்பு போகத்தான் செலவு செய்ய வேண்டும். இதைதான் உலகின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பஃபெட்டும் வலியுறுத்துகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.