மகாராஷ்டிரா சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக முதல்வர் ஷிண்டே தலைமையில் ஓர் அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து சிவசேனாவின் சின்னத்தை முடக்கிவிட்டு இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனாவாக அறிவித்திருக்கிறது. இதனால் உத்தவ் தாக்கரே தன்னுடைய தந்தை உருவாக்கிய சிவசேனாவையும், வில் அம்பு சின்னத்தையும் இழந்திருக்கிறார். தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “சிவசேனா பெயர், சின்னத்தை வாங்க ரூ.2,000 கோடி பணம் கைமாறியிருக்கிறது. இது 100 சதவிகிதம் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதனை விரைவில் வெளியிடுவேன். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு வில் அம்பு சின்னத்தை வழங்கியது நீதி கிடையாது. அது ஒரு வியாபாரம். இதில் இதுவரை 2,000 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இது எனது ஆரம்பக்கட்ட கணிப்பு. எம்.எல்.ஏ-க்களை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கின்றனர். எம்.பி-க்களுக்கு 100 கோடி ரூபாய் வரை கொடுத்திருக்கின்றனர்.
கவுன்சிலர்களை வாங்க ஒரு கோடி ரூபாய் வரை கொடுக்கின்றனர். அப்படி இருக்கும்போது சின்னம் மற்றும் கட்சியின் பெயரை வாங்க எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள். எனக்கு தெரிந்தவரை ரூ.2,000 கோடி செலவிட்டிருக்கின்றனர். நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது கிடையாது” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ சதா சர்வான்கர் மறுத்திருக்கிறார். “சஞ்சய் ராவத் கேஸியராகவா செயல்பட்டார்” என்று, அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில், தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்டில் நாளை மேல் முறையீடு செய்கிறார். நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்மீதான இறுதி விசாரணை நடைபெறுகிறது. அதோடு நாளை தாக்கல் செய்யப்படும் மனுவும் சேர்த்து நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.