தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பெரும் புகழை அடைந்தவர்களுள் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். விஜய் சேதுபதி இல்லாத படங்களே இல்லை என்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றது. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு போற்றப்படும் இவர் கதாநாயகன், வில்லன் என பல பரிமாணங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது, கதாநாயகனாக நடிக்கும்போது இவருக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறதோ அதைவிட அதிகமாக வில்லனாக நடிக்கும்போது கிடைக்கிறது. சமீபத்தில் அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பான பார்ஸி வெப் தொடரில் ஷாஹித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். பல மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ஹாரர் காமெடி திரைப்படமான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்தின் நான்காவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குனர் இறங்கியுள்ளார். அரண்மனை-4 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னர் செய்திகள் வெளியானது. இந்த செய்தியினை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சந்தானம் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது, இதற்கான காரணம் என்னவென்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பதால் இயக்குநர் சுந்தர்.சி ‘அரண்மனை-4’ படத்தில் நடிக்க வைக்க மற்றொரு பிரபல நடிகரை தேடும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெளியாகியுள்ள சில தகவல்களின்படி இயக்குனர் சுந்தர்.சி நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து தனது ‘சங்கமித்ரா’ படத்தை புதுப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.