பழநி: பழநியில் டாக்டர் வீட்டிற்குள் புகுந்து சைக்கிளை திருடும் வாலிபர் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் (50). சித்தா டாக்டர். இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தியிருந்தார். அந்த சைக்கிளை யாரோ திருடிச் சென்றனர். திருட்டு குறித்து மனோகரன் பழநி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், மனோகரன் வீட்டில் புகுந்து சைக்கிளை, மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த வீடியோவில் சுமார் 20 வயதுடைய வாலிபர் மனோகரன் வீட்டில் சாதாரணமாக சென்று அங்கிருந்த சைக்கிளை திருடிக்கொண்டு வெளியே வந்து ஓட்டிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ காட்சி அடிப்படையில் அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.