வரும் 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே, தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பூத் அளவில் பாஜகவை பலப்படுத்தும் பணியில் அக்கட்சியின் தலைமை இறங்கியுள்ளது.
இந்நிலையில், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று வாய்ஸ் கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசியதாவது, “மக்களவைத் தேர்தலுக்கான நம் பணியில் பூத் அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டி உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
இதையே தேசியத் தலைவர் நட்டாவும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, அனைத்து நிர்வாகிகளும் வலிமையான பூத் கமிட்டி தற்போது உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
அப்படி இல்லை எனில், பிப். 20 (நாளைக்குள்) தலைவர் மற்றும் 12 நிர்வாகிகளுடன் வலிமையான பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். பூத் கமிட்டியை அமைத்த உடன், 30 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற விகிதத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பூத் கமிட்டி அளவில் வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்தி, அதில் மத்திய அரசின் திட்டங்கள், தேசிய அளவிலான செய்திகளை பகிர வேண்டும்” என்று கேசவ விநாயகம் நிர்வாகிகளுக்கு உத்தரவிடும் வகையில் பேசினார்.
நாளைக்குள் தமிழகம் முழுவதும் வலிமையான பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று, பாஜக நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது, பாஜக தனித்து களமிறங்குகிறதா? என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.