
அடுத்த வாரம், இந்தியாவுக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 8 அதிகாரிகள் வருகை தரவிருக்கின்றனர். இவர்களை அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் தலைமை ஏற்று வழி நடத்துவார். இந்த கருத்தரங்கில் முக்கியமாகச் சீன பிரச்னைகள் குறித்துப் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

தென் கொரியாவின் கிழக்கு கடலில் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தியதாக, தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார். ஜப்பானின் மேற்கு கரையிலும் பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

கனடாவில் நடந்து முடிந்த 2021 தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 2021 தேர்தலில் ஆளும் லிபரல் கட்சிக்கு ஆதரவாக சீனா செயல்பட்டிருக்கலாம் என்று கனட ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குடியிருப்பு கட்டடம் ஒன்று முழுவதுமாக சிதைக்கப்பட்டது.

98 வயதாகும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தற்போது, வீட்டு மருத்துவச் சிகிச்சையில் இருக்கிறார்.

நெதர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் சில ரஷ்ய அதிகாரிகளை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாக, அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. மாஸ்கோவின் உளவு பார்க்கும் நடவடிக்கைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவை எதிர்த்தும், தலைமை தொழிலதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும் துனிசியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46,000-ஐ கடந்தது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.