பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு: 231 பறவையினங்கள் பதிவு; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கூடலூர்: பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், அழிந்து வரும் பறவை இனங்கள் மற்றும் முந்தைய ஆய்வுகளில் பதிவு செய்யப்படாத பறவைகள் என 231 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளுக்கு உட்பட்ட 925 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயம். இந்த புலிகள் சரணாலய பகுதியில் கடந்த 2008, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 323 வகையான பறவை இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. 4வது பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜனவரி இறுதியில் நடைபெற்றது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், வனச்சரணாலயத்தில் பறவையினங்கள் கூடி உள்ளனவா? புதியதாக பறவையினங்கள் வந்துள்ளனவா? காலநிலை சீதோஷ்ண நிலை மாற்றம், பறவைகளின் இயற்கைவாழ் சூழலில் மனிதர்கள் சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறி நுழைவதாலும் அது பறவையினங்களை பாதிக்கிறதா? இடம் பெயர்கிறதா? என்ற கோணத்தில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக புலிகள் காப்பகத்தில் பறவைகள் அதிகம் வந்து போகும் இடங்கள், பறவைகள் தங்கி ஓய்வெடுக்கும் இடங்களான வண்டிப்பெரியாறு, தேக்கடி, வல்லக்கடவு, அழுதா மற்றும் பம்பை வனச்சரங்களுக்கு உட்பட்ட 30 இடங்களில் கணக்கெடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.

கோட்டயம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஸ்ரீ பிரமோத் வழிகாட்டுதலின் கீழ், பெரியார் புலிகள் சரணாலய கிழக்குப்பிரிவு துணை இயக்குநர் பாட்டீல் சுயோக் சுபாஷ்ராவ், உதவி கள இயக்குநர் சுஹைப், பாதுகாப்பு உயிரியலாளர்கள் அனூப் விஜயகுமார், ஸ்ரீ ரமேஷ் பாபு, பறவை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீ பிரேம்சந்த் ரகுவரன், ஸ்ரீ அகமது உமர், டாக்டர் நமீர் ஆகியோர் கணக்கெடுப்புக்கு தலைமை வகித்தனர். இதில் கேரள வனத்துறையினர், வனக்கல்லூரி மாணவ மாணவியர், வன உயிரின ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

புலிகள் காப்பகத்திற்குள் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி 231 வகையான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் அழிந்து வரும் 14 பறவையினங்கள் மற்றும் முந்தைய ஆய்வுகளில் பதிவு செய்யப்படாத நீலகிரி வுட் பிஜியன், க்ரேட்ஹார்ன்பில், லாக் பிங் த்ரஷ், ஷவன்னா நைட் ஜார், ஸ்ரீலங்கா பேஅவுல், லார்ஜ் ஹாக் குக்கூ, ஒயிட் பெலைடு ஷோலாகி, காஷ்மீர் பிளைகேட்சர், ரூக்பஸ் பெலைடு ஈகிள், ப்ளாக் அண்ட் ஆரஞ்ச்பைளை கேட்சர் ஆகிய 11 பறவை இனங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காஷ்மீர் பிளைகேட்சர்’ என்பது மிகவும் அரியவகை பறவை ஆகும். இது வடமேற்கு இமயமலையில் இனப்பெருக்கம் செய்து, தென்னிந்தியா மற்றும் உத்தரகாண்ட் சில்லா மலைக்காடுகளில் குளிர்காலத்தை கழிக்கும். பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் முதல்முறையாக இந்த பறவை கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் அழிந்து போன பறவை இனமாக கருதப்பட்ட ‘ஆரஞ்ச் பிரஸ்டேட் கிரீன் பிஜியன்’ எனப்படும் மஞ்சள் வரி புறா 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.