Vaathi Movie Day 2 Collection: தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா நடித்த வாத்தி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. தமிழ், தெலுங்கில் தயாரான இப்படம், தெலுங்கில் ‘Sir’என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில், படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்திருந்தது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எழுந்தது.
ஆக்ஷன் பாணியில் உருவான இப்படம், கல்லூரி விரிவுரையாளர் ஒருவரின் கதையை சொல்கிறது. பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி நிறுவனங்களை எதிர்ப்பவராக பாலமுருகன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அதை எதிர்த்து போராடி, அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், வாத்தி படத்துடன் செல்வராகவன் நடிப்பில், மோகன்.ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் படமும் வெளியாகியிருந்து. மேலும், கடந்த வாரம் வெளியான டாடா திரைப்படமும் திரையரங்கில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், வாத்தி படத்தின் வசூல் குறித்து பல கேள்விகள் எழுந்தது.
அந்த வகையில், வாத்தி படம் தமிழ்நாட்டில் ரூ. 8 கோடி, ஆந்திரா & தெலங்கானாவில் ரூ. 3 கோடி, கர்நாடகாவில் ரூ. 1.5 கோடி, வெளிநாட்டில் ரூ. 1.5 கோடி என மொத்தம் ரூ. 14 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது நாள் வசூல் விவரமும் தற்போது வெளிவந்துள்ளது.
நேற்று, மகாசிவராத்திரி கொண்டாடப்பட்ட நிலையில், புது திரைப்படமான வாத்தி திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இரண்டாம் நாளில் மட்டும் வாத்தி திரைப்படம் மொத்தம் 11 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஞாயிறுக்கிழமையான இன்றும் படத்தின் டிக்கெட் முன்பதிவு அமோகமாக உள்ளதால் வாத்தி நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் கடந்த திரைப்படமான திருச்சிற்றம்பலம் திரையரங்கில் நீண்ட நாள் வெற்றிகரமாக ஓடிய நிலையில், வாத்தி திரைப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.