மயில்சாமி: எம்.ஜி.ஆர் பக்தன்… ஆனா அதிமுக மீது என்ன கோபம்? 2021 தேர்தல் பிளாஷ்பேக்!

நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒருபுறம் அரங்கேற, பழைய நினைவுகளை சமூக வலைதளங்கள் வாயிலாக அசைபோடும் நிகழ்வுகள் மறுபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. இவரது அரசியல் ரீதியான கருத்துகள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. எம்.ஜி.ஆரின் தீவிர பக்தராக என்றென்றும் வலம் வந்தவர்.

அதிமுகவின் நிலை

தனது ஒவ்வொரு பேட்டியிலும் அவரைப் பற்றி சொல்லாமல் விட்டதே இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவின் நிலை குறித்து தனது வேதனையை பகிர்ந்து கொண்டவர். அந்த வகையில் 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். அதில் 1,440 வாக்குகள் மட்டுமே பெற்று 8ஆம் இடம் பெற்று தோல்வியை தழுவினார். அப்போது அவர் பல்வேறு சிறப்பு நேர்காணல்களை அளித்துள்ளார்.

மயில்சாமி பேச்சு

அதில் மயில்சாமி பகிர்ந்து கொண்ட கருத்துகள் தற்போது வைரலாக தொடங்கியுள்ளன. அதாவது, நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் என்னுடைய தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவரை தவிர வேறு யாரையும் என்னால் தலைவராக ஏற்க முடியாது.

மத்திய அரசின் கட்டுப்பாடு

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவும், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுகவும் தற்போது இல்லை. அந்த கட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல. அதிமுக தொண்டர்கள் பலருக்கும் இருக்கக் கூடிய வேதனை. ஜெயலலிதா எப்படி பெயர் வாங்கினார்கள் தெரியுமா? கடைசி தொண்டன் கூட ஒருநாள் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தான்.

இந்தி எதிர்ப்பு

ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை எனக் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் பேசுகையில், தேசிய கட்சி என் மாநிலத்தை ஆளக் கூடாது. இந்தி பேசக்கூடியவர்கள் எங்களை ஆள வரக்கூடாது. குப்பனோ, சுப்பனோ யார் வேண்டுமானாலும் இந்த மண்ணில் இருந்து வரட்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தி வேண்டாம் என்று நாம் போராடினோம்.

பாஜகவிற்கு பினாமி

தீக்குளிப்பு, ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். எம்.ஜி.ஆர் பாட்டே பாடியிருக்கிறார் என இந்தி எதிர்ப்பு குறித்த தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினார். விருகம்பாக்கம் தொகுதியில் நான் சுயேட்சையாக போட்டியிடக் காரணம், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த எதுவுமே சரியில்லை.

எனக்கு மட்டுமில்ல. கட்சிக்காரர்களுக்கே அதிருப்தி. எத்தனை கட்சிக்காரர்கள் சுயேட்சையாக நிற்கிறார்கள் தெரியுமா? கனக்கெடுத்து பாருங்கள். உண்மை தெரியவரும். பாஜகவிற்கு பினாமி அரசு போல செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தைரியமாக முடிவெடுக்க தைரியமில்லை எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.