மாமல்லபுரம்: ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரீட் சவுண்ட் ராக்கெட் இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள பட்டுபுலம் பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் குறைந்த உயரத்தில் பறந்து மீண்டும் பூமிக்கு திரும்பக்கூடிய சோதனையாகும் இதில் வானிலை,கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை ஆகியவற்றை ஆராய 3,500 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 5,000 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய 150 சிறிய செயற்கை கோள் வைத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 2.4 கிலோ மீட்டர் உயரம் வரை விண்ணுக்கு சென்று பின்னர் பூமிக்கு திரும்பியுள்ளது.
இந்த நிகழ்வில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இஸ்ரோ முன்னாள் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஏராளமான மாணவர்களும் ராக்கெட் விண்ணில் பாயும் காட்சியை நேரில் கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை செயற்கை கோள் சார்ந்த தொழில் துறை வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனக்கேட்டு கொண்டார். மேலும் விண்வெளி அறிவியலில் வேகமாக முன்னேறி வரும் நாடக இந்திய திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிகழிச்சியில் மேடைநோக்கி விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் நடந்து வந்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் கால்தடுக்கி தவறி விழுந்தார். தமிழிசை உடன் இருந்த பாதுகாப்பாளர்கள் உடனே அவரை தூக்கிவிட்டதை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு ராக்கெட் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.