மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா

உலகப் புகழ் பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவதோடு, ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பெருவிழாவும் 13 நாட்கள் நடைபெறும்.
image
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மயான கொள்ளை திருவிழா இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான திருதேரோட்டமும் இன்று நடைபெற்று வருகிறது.
image
ஆலயத்தில் இருந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் மயான காளியாய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்காளம்மன் மயானத்தை நோக்கிச் சென்றபோது ஏராளமான பக்தர்கள கோழிகளை கடித்தவாறு அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது காய்கள், கனிகள், பழ வகைகள், மலர்கள், நாணயம், ரூபாய் நோட்டுகள் ஆகியவைகளை அம்மன் மீது வாரி இரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
image
இதைத் தொடர்ந்து ஆண்கள் பெண்கள், திருநங்கைகள் உட்பட அம்மன், காளி, குறத்தி போன்ற தெய்வங்களின் திருஉருவங்களை போன்று வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவை காண விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.