கோவை: கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனுக்கு செல்லும் குடியரசு தலைவரின் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
கோவை ஈஷா வளாகத்தில் நடந்த மகா சிவராத்திரி விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூரியில் இன்று நடக்கும் கலந்துரையாடல் நிகழ்வு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஈஷா வளாகத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார்.
பின்னர், நேற்று இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் குடியரசு தலைவர் தங்கினார். அதைத் தொடர்ந்து இன்று காலை 9.25 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் முப்படை பயிற்சி கல்லூரிக்கு செல்வதாகவும், அங்கு நடக்கும் கலந்துரையாடலில் குடியரசு தலைவர் உரையாற்றுவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இன்று காலையில் இருந்தே நீலகிரியில் வானிலை மேகமூட்டமாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், சாலை வழியாக செல்லவும் திட்டமிடப்படவில்லை. எனவே, குடியரசு தலைவரின் வெலிங்டன் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள குடியரசு தலைவர் முர்மு, இன்று மதியம் 12.15 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.