லக்னோ: உத்தர பிரதேசத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாத, ௧௪ தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில், நான்கு மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாட்டிலேயே மிகவும் அதிகமாக, ௮௦ லோக்சபா தொகுதிகள் இந்த மாநிலத்தில் உள்ளன.
லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த தேர்தலில் இங்கு, ௧௪ தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக காரணங்கள் குறித்து பா.ஜ., ஆய்வு செய்கிறது.
கடந்த தேர்தலில், ௬௪ தொகுதிகளில் பா.ஜ., வென்றது. பகுஜன் சமாஜ், ௧௦ இடங்களிலும், மூன்றில் சமாஜ்வாதியும், ரேபரேலி தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றன.
தோல்வி அடைந்த ௧௪ தொகுதிகளில் தற்போதுள்ள நிலவரம், கட்சியின் பலம், பலவீனம், வெற்றி பெறுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.
இந்தப் பணியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், அனுப்ரியா, அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கென சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அங்கு அவர்கள் கள ஆய்வை மேற்கொண்டனர்.
தங்கள் ஆய்வின் முதல்கட்ட அறிக்கையை இந்த மத்திய அமைச்சர்கள் சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க, மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement