”அதானி குழுமத்துக்கு மேலும் கடன் வழங்க தயார்”- பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பின் பின்னணி என்ன?

அதானி பற்றிய செய்திகள் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களில் தவறாமல் இடம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், இன்று அதானி குழுமத்துக்கு கூடுதலாக கடன்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதானியின் இன்றைய நிகர மதிப்பு
ஹிண்டன்பர்க் (அமெரிக்க புலனாய்வு நிறுவனம்) வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் தொடர்ந்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்றுவரை, அதன் பங்குகள் வீழ்ச்சியிலேயே உள்ளன. அதன்படி, கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பானது இன்றைய தேதியில், 50 பில்லியன் டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது. ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 49.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
image
கடந்த ஒரு மாதத்துக்கு முன் 12000 கோடி டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, தற்போது 4,910 கோடியாக இருக்கிறது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள் அதானி சொத்து மதிப்பு 7100 கோடி டாலர் குறைந்துள்ளது. மேலும், கடந்த ஒரு மாதத்துக்கள் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
கூடுதல் கடன் வழங்க பேங்க் ஆஃப் பரோடா முடிவு
இந்த நிலையில், அதானி குழுமத்துக்கு மேலும் கடன் தர இருப்பதாக பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது. முன்னதாக அதானி குழுமம், பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.7 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் அதானி குழுமத்துக்கு கடன் வழங்கப்படும் எனக் கூறியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைவர் சஞ்சீவ் சத்தா, “பங்குச்சந்தையில், அதானி குழும பங்குகளில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தினை பற்றி தமக்கு கவலையில்லை. வங்கிக்குத் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், கடன் பெறுவதற்கான தகுதி அதானி குழுமத்துக்கு இருந்தால் கூடுதல் கடன்கள் வழங்கப்படும். நல்ல நேரம், கெட்ட நேரம் இரண்டிலுமே கடனுக்கான தரநிலைகளை கடைப்பிடித்தால் போதும்” என அவர் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
image
கடன் வழங்க முக்கியக் காரணம்
இதற்கு முக்கியக் காரணம், மும்பையில் தாராவி பகுதியை மேம்படுத்துவதற்கான திட்டம் அதானி குழுமத்துக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 50.7 பில்லியன் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்தை மையமாக வைத்தே அதானி குழுமத்துக்கு கூடுதல் கடன்கள் வழங்கப்படும் என பேங்க் ஆஃப் பரோடா வங்கி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
கடன் கொடுத்த வங்கிகள் விவரம்!
முன்னதாக, அதானி குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை நிலையில்லாமல் உள்ளதால், அக்குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு வங்கிகளிடம் ஆா்பிஐ கோரியிருந்ததாகவும், அதன்படி, வங்கிகளிடமிருந்து அதானி குழும நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.2.1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அவற்றில் இந்திய வங்கிகளில் பொதுத் துறை வங்கிகளே அதானி குழுமத்துக்கு 90 சதவீதத்துக்கு அதிகமான கடன்களை வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. எஸ்பிஐ ரூ.22,000 கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடியையும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.7,000 கோடியையும் அதானி குழும நிறுவனங்களுக்கு கடனாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், மற்ற வங்கிகள் கடன் விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.