கீவ், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் துவங்கி ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டுக்கு ஆயுதம் வினியோகிப்பதை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளார்.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த ஆண்டு பிப்., 24 முதல் ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு, உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான போரில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கின், கெர்சன், மரியுபோல் நகரங்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின.
ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், உக்ரைனின் முக்கிய கட்டடங்கள் தீக்கிரையாகின. இந்தப் போரில், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், போரை நிறுத்தாத ரஷ்யா, கடந்த ஆண்டு அக்டோபர் முதல், உக்ரைன் மீது அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
தங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தாலும், உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் மக்களின் கொடுந்துயரத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த இந்தியா எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார்.
இங்கு, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, ‘வான்வழி குண்டுவெடிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உபகரணங்கள், போருக்கான வெடிமருந்துகள், வான் கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்’ என ஜோ பைடன் கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
‘இந்தப் போரில் உதவ, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப சீனா பரிசீலித்து வருகிறது’ என அமெரிக்கா கூறியதற்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜோ பைடனின் உக்ரைன் பயணம் உலக அரசியல் அரங்கில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்