ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் எம்எல்ஏவின் வீடு உட்பட 20 இடங்களில் நிலக்கரி வரி விதிப்பு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நிலக்கரி வரி விதிப்பு விவகாரத்தில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் முன்னாள் துணைச் செயலாளர் சவுமியா சவுராசியா உட்பட 8 பேர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கை (பிஎம்எல்ஏ) விசாரிக்கும் ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் நிலக்கரி வரி விதிப்பு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளின் தொடர்புடையவர்களின் வீடுகள் உட்பட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பிலாய் காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான ராய்ப்பூர் மற்றும் பிலாய் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தன.