இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த குரங்கைப் பிடித்த பாகிஸ்தான் அதிகாரிகள், மிருகக்காட்சிசாலையில் போதிய இடம் இல்லாததாலும், போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததாலும், குரங்கைத் தெருக்கூத்து கலைஞர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அவசர சேவைப் பிரிவு அதிகாரி முகமது ஃபரூக், “பஹவல்நகர் எல்லையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு குரங்கு நுழைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, 200 அடி உயர செல்போன் கோபுரத்திலிருந்து அந்தக் குரங்கை, பஞ்சாப் அவசர சேவைப் பிரிவு 1122-ன் மீட்புக்குழுவினர் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து குரங்கைப் பாதுகாப்பாக மிருகக்காட்சிசாலையில் வைக்க பஹவல்நகர் வனவிலங்குத் துறையை அணுகியபோது, அங்கு இட நெருக்கடி, குரங்கு வைப்பதற்கான கூண்டு பற்றாக்குறையைக் காரணம் காட்டி அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, குரங்கைப் பராமரிப்பதற்காக அதை, தெருக்கூத்துக் கலைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பஹவல்நகர் மாவட்ட வனவிலங்கு அதிகாரி முனாவர் ஹசைன் நஜ்மி, “உள்ளூர் மிருகக்காட்சிசாலையில் இட நெருக்கடி தவிர, குரங்குகளுக்கு சிகிச்சையளிக்க பஹவல்நகர் வனவிலங்குத் துறையிடம் ஒரு கால்நடை மருத்துவர்கூட இல்லை. அதோடு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெரும்பாலான விலங்குகள், குறிப்பாக லாங்கர்கள், குரங்குகள் ஆகியவை காயங்களுடன் இறக்கின்றன” என்றார்.