ஹாசன் : கர்நாடகாவில், ‘டெலிவரி பாயை’ கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துவிட்டு, ‘ஐபோனை’ அபகரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், அரசிகெரேயில் உள்ள அஞ்சேகொப்பலுவைச் சேர்ந்தவர் ஹேமந்த் தத்தா, 30. இவர், சமீபத்தில் ‘பிளிப்கார்ட்’டில், 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ‘செகண்ட் ஹேண்ட்’ ஐபோனுக்கு ஆர்டர் செய்தார்.
இதை கடந்த 7ம் தேதி லட்சுமிபூரைச் சேர்ந்த ஹேமந்த் நாயகா, 27, என்பவர் டெலிவரி கொடுப்பதற்காக, அவர் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சென்றதும், ஐபோன் பாக்ஸை திறந்து காட்டும்படி, ஹேமந்த் தத்தா கூறினார். ‘முடியாது’ என மறுத்த நாயகா, ‘பணத்தை கொடுங்கள்; நான் செல்ல வேண்டும்’ என்றார்.
இதைக் கேட்ட தத்தா, ‘இங்கேயே அமர்ந்திரு… நான் பணம் எடுத்து வருகிறேன்’ என்றார். வெளியில் சென்றவர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து,வீட்டுக்குள் அமர்ந்து, தன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த நாயகாவை, கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றார்.
பின், அவரது உடலை தன் வீட்டில் மறைத்து வைத்தார். வீட்டில் துர்நாற்றம் எழவே, 11ம் தேதி சாக்கு மூட்டையில் நாயகா உடலை எடுத்துச் சென்று, தபால் நிலையம் அருகில் பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
இதற்கிடையில், ‘கடந்த 7-ம் தேதி வேலைக்குச் சென்ற நாயகா வீடு திரும்பவில்லை’ என அவரது சகோதரர் மஞ்ச நாயகா, அரசிகெரே நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கடைசியாக அவர் டெலிவரிக்கு சென்ற தத்தாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
தத்தாவை நேற்று போலீசார் கைது செய்தனர். ஐபோன் வாங்க பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்து, போனை அபகரித்து கொண்டதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்