புதுடெல்லி: ‘அதானி குழுமத்தின் மோசடியில் தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் முக்கிய பங்கு, செபி, அமலாக்கத்துறை விசாரணைக்கு தகுதியானதில்லையா?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது டிவிட்டரில், ‘‘சீன ஊடுருவல் போல அதானி விவகாரத்திலும் பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுன சாமியாராக இருக்கிறார். அதற்காக நாங்கள் அவரை கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டோம். இதோ இன்றைய கேள்வி. அதானி குழும விவகாரங்களில் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி விலகி இருக்கிறார். ஆனால் அவர் பெயரில் பல நாடுகளில் பல போலி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
வினோத் அதானி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் பல கோடி ரூபாயை இந்தியாவில் உள்ள அதானி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக நகர்த்தி வருகின்றன. சிங்கப்பூரில் உள்ள வினோத் அதானியின் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி குழுமத்தின் பல சொத்துக்களை கட்டுப்படுத்துகிறது என ஆஸ்திரேலியா நடத்திய விசாரணையில் உறுதி ஆகி உள்ளது. ரஷ்யா வங்கியிலும் வினோத் அதானி நிறுவனம் மோசடி செய்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே முதலீட்டாளர்களிடமும் பொதுமக்களிடமும் ஏன் தனது நெருங்கிய நண்பர் பற்றி பிரதமர் மோடி இவ்வளவு அப்பட்டமாக பொய் சொல்கிறார். அதானி குழும மோசடியில் வினோத் அதானியின் முக்கிய பங்கு, செபி, அமலாக்கத்துறை விசாரணைக்கு தகுதியானதில்லையா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.