திருநெல்வேலி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் கடத்தப்பட்ட இளம்பெண் கேரளாவில் மீட்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீரெங்கநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (24). இவரும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுமிகா(19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து இருவரும் சொந்த ஊர் வந்த நிலையில், இதையறிந்த சுமிகாவின் தந்தை முருகேசன், தாய் பத்மா உட்பட 12 பேர் முருகன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி, சுமிகாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் தனது மனைவி சுமிகாவை அவரது தந்தை தாய் உட்பட 12 பேர் காரில் கடத்திச்சென்று விட்டதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட சுமைக்காவை மீட்க தனி படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த அமுதா, அனுசியா, பாப்பா, தங்கம்மாள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் கன்னியாகுமரியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி சென்ற போலீசார் செல்வகுமார், விஜயகுமார், வைகுண்டமணி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
ஆனால் சுமிகாவின் பெற்றோர் மற்றும் சுமிகாகவும் அங்கு இல்லை என்பதால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்தனர். அப்பொழுது கேரளா பாலராமபுரத்தில் பதுங்கி இருந்த சுமிகாவின் தாய், தந்தை மற்றும் அவரது சித்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த சுமிகாவை பாதுகாப்பாக மீட்ட போலீசார், இவர்கள் நான்கு பேரையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதில் கணவருடன் செல்ல சுமிகா விருப்பம் தெரிவித்ததால், போலீசார் சுமிக்காவை கணவர் முருகனிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுமிகாவின் தாய், தந்தை உட்பட மூன்று பேரையும் நெல்லை சிறையில் அடைத்தனர்.