வேளச்சேரி: வேளச்சேரி அருகே நேற்று காலை பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியவர், அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அந்த கம்பியை மிதித்த நாயும் இறந்தது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, உயிரிழந்தவரின் உறவினர்களும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (40). இவர், இவரது மகன் ஒட்டியம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பும், மகள் அதே பள்ளியில் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களை, இஸ்மாயில் தினசரி சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை தனது 2 குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நேதாஜி நகர் பிரதான சாலை அருகே வந்தபோது, சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் இருந்து, உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து முகமது இஸ்மாயில் மீது விழுந்தது.
இதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். மேலும் அவ்வழியாக ஓடிவந்த நாயும், இந்த கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது. அப்போது, அவ்வழியாக வந்த மினிடெம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்த மின் வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். தகவலறிந்த முகமது இஸ்மாயிலின் உறவினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேதாஜி பிரதான சாலையில் திரண்டு, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கேளம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் பெரும்பாக்கம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் நேரில் வர வேண்டும். அதுவரையில் உடலை எடுக்க விடமாட்டோம்’’ என்றனர்.
அவர்களிடம், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலைமறியலை அவர்கள் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், முகமது இஸ்மாயில் சடலத்தை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். பொதுமக்களின் சாலைமறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.