திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட சடையன்குப்பம் பகுதியில் குழாய்கள் மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பைப்லைன் உடைந்துள்ளதால், குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதோடு, பணம் கொடுத்து கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எனவே, நேற்று காலை குடிநீர் சப்ளை செய்ய, மணலி மண்டல குடிநீர் வழங்கல் வாரிய குடிநீர் ஒப்பந்த லாரி, சடையன்குப்பம் பகுதிக்கு வந்தது. அப்போது, அங்கிருந்த பெண்கள், லாரிகளின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் போதவில்லை என்றும், எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்து தடையில்லாமல் குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து, காலி குடங்களுடன் குடிநீர் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் லாரி விடுவிக்குமாறு கூறினர். அப்போது, குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் இங்கு வந்து குடிநீர் குழாய்களை சரிசெய்து, குழாய் மூலம் முழுமையாக குடிநீர் விநியோகிக்க உறுதி அளித்தால் தான், லாரியை விடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் உங்கள் பகுதியில் குழாய்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.