கொழுந்தியாளை திருமணம் செய்து கொள்ள மனைவியை சால்வையால் நெரித்துக் கொன்ற டாக்டர்: காதலர் தினத்தில் ஆசை வார்த்தை கூறி மடக்கிய பரிதாபம்

பரேலி: கொழுந்தியாளை திருமணம் செய்து கொள்ள வேண்டி, மனைவியை சால்வையால் நெரித்துக் கொன்ற டாக்டரை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  உத்தர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த டாக்டரான பரூக் ஆலம் என்பவர், கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று மனைவி நஸ்ரீனியிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, ‘எனக்கும் உனக்கும் இடையிலான காதலை நிரூபிக்க நீ எனக்கு என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டார். அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த நஸ்ரீனி, ‘உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்’ என்றார். இந்த பதிலை கேட்ட பரூக் ஆலம், சற்றும் எதிர்பாராமல் திடீரென தனது மனைவி நஸ்ரீனியை சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் தனது மனைவியின் கொலையை மறைப்பதற்காக, போலீசுக்கு போன் செய்து, ‘கொள்ளையடிக்க வந்த கும்பல், எனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நஸ்ரீனியின் உடலை கைப்பற்றி பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தனது மனைவியை கொன்றுவிட்டதாக நாடகமாடிய பரூக் ஆலம் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அதையடுத்து அவரை உரிய முறையில் ‘கவனித்து’ போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனது மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட டாக்டர் பரூக் ஆலம், தனது மனைவி நஸ்ரீனியின் சகோதரியை (கொழுந்தியாள்) காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு நஸ்ரீன் ஒரு தடையாக இருந்து வந்தார். இதை தவிர்க்கவே, அவரை கொலை செய்ய திட்டமிட்டார். காதலர் தினத்தன்று அவரிடம் ஆசையாக பேசி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, வீட்டில் கொள்ளை நடந்துள்ளதாகவும், கொள்ளையடிக்க வந்தவர்கள் நஸ்ரீனை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாரிடம் நாடகமாடி சிக்கிக் கொண்டார்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.