கிருஷ்ணகிரி: சமூக வலைதளங்களில் காவல் துறை குறித்து தவறான தகவலைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கொண்டேப்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் ரகு என்பவர் வேலம்பட்டியில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். அப்போது, அவர் காவல் துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்து, காணொலி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் ராணுவ வீரர் ரகு மீது 2020, 21 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் 3 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கடந்த மாதம் மொட்டுப் பாறை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்ததால், ரகு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், காவல் துறை மீது ரகு சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை. இது தொடர்பாக சமூக ஊடகங்கள், வேறு எந்த தளத்திலும் தவறான தகவல்கள், வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன் நேற்று தனது குடும்பத்துடன் வந்து எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘ராணுவ வீரர் ரகு, எங்கள் குடும்பத்தை அவமரியாதை யாகப் பேசி, சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டுள்ளார். மேலும், எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.