சென்னை: வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை ஆதாரமாக ஏற்க முடியாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ம்தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் ஆணையத்திடம் புகார்: பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஈரோட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக அதிமுக, பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளுன.
மேலும், வாக்காளர்களின் பெயர், செல்போன் எண்கள் பொதுவெளியில் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும், களநிலவரம் குறித்தும் விரிவான விளக்கம் அளிக்குமாறு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹுவுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பணப்பட்டுவடா, தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக, மாவட்ட தேர்தல்அலுவலர், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பணப்பட்டுவாடா தொடர்பானவீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக ஏற்க முடியாது. இதுவரை பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் மனு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.